திருவாரூர் மாவட்டம்,மன்னார்குடி அருகே மண் மேடாக மாறி வரும் வடுவூர் ஏரியைத் தூர்வாரி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி - தஞ்சாவூர் சாலையில் உள்ளது வடுவூர் கிராமம். இங்கு பிரதான சாலையோரத்தில் 316.54 ஏக்கரில் பரந்து விரிந்து காணப்படுகிறது வடுவூர் ஏரி. சுமார் 700 ஆண்டுகள் பழைமையான இந்த ஏரிக்கு, தஞ்சை அருகேயுள்ள கள்ளப்பெரம்பூரில் பிரியும் வடவாற்றிலிருந்து தண்ணீர் வருகிறது. வடுவூர் ஏரிக்கான பாசன ஆறு என்ற அடிப்படையில் இந்த ஆற்றுக்கு வடுவூர் ஆறு என்ற பெயர் ஏற்பட்டு, வடவாறு என மருவியதாகக் கூறப்படுகிறது.
வடுவூர் ஏரிமூலம் சுற்றுவட்டாரப் பகுதிகளும், ஒரத்தநாடு வட்டத்தைச் சேர்ந்த பெரும் பகுதிகளும் பாசனம் பெற்று வந்துள்ளன. ஆங்கிலேய ஆட்சியாளர்கள் மூவர்கோட்டை பகுதியில் வடவாற்றிலிருந்து வாய்க்கால்கள் ஏற்படுத்தியதன் மூலம் மன்னார்குடியின் மேட்டுப் பகுதிகளும் பாசனவசதி பெற்றுள்ளன.
இதே போல, பல்வேறு பகுதிகளின் விவசாயப் பணிகளுக்கான தண்ணீர் தேவையை நிறைவேற்றுவதில் முக்கிய பங்காற்றியுள்ளது வடுவூர் ஏரி. முந்தையக் காலங்களில், எப்போதும் தண்ணீர் நிறைந்து காணப்பட்ட இந்த ஏரிக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து அரியவகை பறவைகள் ஆயிரக்கணக்கில் வரத்தொடங்கின.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் வடுவூர் ஏரிக்கு வரும் பறவைகள், இங்கு தங்கியிருந்து இனப்பெருக்கம் செய்த பின்னர், பிப்ரவரி மாத இறுதியில் தங்களின் சொந்த ஊருக்கு சென்றுவிடுவது வழக்கம்.
பல்வேறு பகுதிகளிலிருந்தும் எண்ணற்ற பறவைகள் வந்து செல்வதைக் கண்ட இயற்கை ஆர்வலர்கள் வடுவூர் ஏரியை பறவைகள் சரணாலயமாக்க வேண்டும் எனக் கோரினர். இது தொடர்பாக 1990-ஆம் ஆண்டில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்பட்ட போது, வடுவூர் ஏரி விவசாய பாசனத்துக்கு முக்கிய பங்காற்றுவதைக் கருத்தில் கொண்டு பறவைகள் சரணாலயமாக மாற்றக் கூடாது என்ற கருத்தும் கூறப்பட்டது.
இருப்பினும், பெரும்பாலானோரின் கருத்துக்கேற்ப வடுவூர் ஏரியை பறவைகள் சரணாலயமாக அறிவித்து 1991-ஆம் ஆண்டு அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி, பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த வடுவூர் ஏரியின் நிர்வாகம் வனத் துறைக்கு மாற்றப்பட்டது. இதற்கான முழுமையான அரசாணை 1999-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
இந்த அரசாணைப்படி, கல்லணையிலிருந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்படும் காலம் முதல் தண்ணீர் திறப்பு நிறுத்தப்படும் காலம் வரை பொதுப் பணித் துறை நிர்வாகத்திலும், மற்ற காலங்களில் வனத் துறையின் கட்டுப்பாட்டிலும் இந்த ஏரி இருந்து வருகிறது.
கடந்த 1990-ஆம் ஆண்டில் இந்த ஏரியை பறவைகள் சரணாலயமாக மாற்ற வேண்டும் என தீவிரமாக வலியுறுத்தியவர்கள் பலரும், வடுவூர் ஏரியின் நிலையைக் கண்டு மனம் வெதும்பும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. காரணம், கடந்த 25 ஆண்டுகளாக வனத் துறையின் கவனிப்பாரற்ற நிலையால் தூர்ந்து போயுள்ள வடுவூர் ஏரி, மண் மேடாக மாறியிருப்பதுதான்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் சார்பில் வடபாதி விவசாயி அஞ்சப்பா சி.ராமமூர்த்தி கூறியது:
வடுவூர் ஏரி மூலம் நேரடியாக 1,356 ஏக்கர் நிலங்களும், மறைமுகப் பாசனம் மூலம் 9,100 ஏக்கர் பரப்பிலான விளைநிலங்களும் பயன்
பெற்றன.
தண்ணீர் இல்லாத காலத்தில் வடுவூர் மற்றும் சுற்றுவட்டப் பகுதி விவசாயிகள் அரசுத் துறையில் அனுமதி பெற்று, ஏரியில் மண் எடுத்து விவசாயப் பயன்பாட்டுக்கு கொண்டு சென்றனர். இதனால், ஏரியின் ஆழம் குறையாமல் பாதுகாக்கப்பட்டது. பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது முதல் இந்நிலை தலைக்கீழாக மாறிவிட்டது.
தென்பாதி விவசாயி ஆர்.திருநாவுக்கரசு:
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஏரி தூர்வாரப்படாததால் வடுவூர் ஏரி மண் மேடாகியுள்ளது. இதனால், ஏரியில் அதிக அளவில் தண்ணீர் தேக்க முடிவதில்லை. ஏரி நிரம்பி உபரி நீரை வெளியேற்றும் தடுப்புக்களும் சரியாக இல்லை. இதனால், அருகில் உள்ள கண்ணணாற்றில் தண்ணீர் சென்று விரையமாகிறது.
சாத்தனூர் கிராமக் கமிட்டித் தலைவர் விவசாயி ஆர். சிவானந்தம் :
ஏரியில் ஆழம் இல்லாததால் நீர் விரையமாகிறது. மேலும், பருவ காலங்களில் ஆண்டு தவறாமல் வந்து செல்லும் பறவைகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து வருகிறது. தற்போதைய நிலையில் ஏரியை 3 மீட்டர் ஆழத்துக்கு தூர்வார வேண்டும். அரசு அனுமதித்தால், ஏரியின் மேல் பகுதியில் முதல் 3 அடிக்கு இருக்கும் இயற்கை சத்து நிறைந்த மண்ணை விவசாயப் பணிக்கு விவசாயிகளே தங்கள் சொந்த செலவில் எடுத்துச்சென்றுவிடுவர். இதனால், அரசுக்கு பல லட்சம் ரூபாய் மிச்சமாகும்.
அதிகாரிகள் நம்பிக்கை ..
இதுகுறித்து வெண்ணாறு வடிநிலக் கோட்ட (அம்மாபேட்டை) உதவிப் பொறியாளர் ரபிந்திரனிடம் கேட்டபோது அவர் கூறியது:
நில, நீர் வளம் திட்டத்தின் கீழ் ஏரியில் மராமத்துப் பணி செய்வதற்காக ரூ. 2 கோடி நிதி கேட்டு பொதுப்பணித் துறை சார்பில் கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வடுவூர் ஏரி, வனத் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், பொதுப்பணித் துறை தன்னிச்சையாக எதுவும் செய்ய முடியாத நிலை உள்ளது. ஏரியை முழுமையாக தூர்வாரி மேம்படுத்த தேவையான நிதியும், திட்டப்பணி செய்வதற்கான அனுமதியும் கிடைத்தால் உடனடியாக திட்டத்தை செயல்படுத்த பொதுப்பணித் துறை தயாராக உள்ளது என்றார்.
மன்னார்குடி வனச் சரக அலுவலர் ராதாகிருஷ்ணனிடம் இதுகுறித்து கேட்டபோது, அவர் கூறியது:
பொதுமக்கள், விவசாயிகள், பறவையின ஆர்வலர்கள் போன்று எங்களுக்கும் வடுவூர் பறவைகள் சரணாலய ஏரியை தூர்வாரி மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கம் உள்ளது. தூர்வாரும் பணியை மேற்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறோம். ஏரியை தூர்வாருவது குறித்து நல்ல அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெக தேர்தல் அறிக்கையின் 10 முக்கிய அம்சங்கள்!

ஹரி இயக்கத்தில் அதர்வா?

பஞ்சாப் கிங்ஸைப் பழிதீர்க்குமா மும்பை இந்தியன்ஸ்?

மேற்கு வங்கத்தில் ஊடுருவல்காரர்களை வரவேற்கிறார் மமதா: அஸ்ஸாம் முதல்வர்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

