நீடாமங்கலத்தில் துணை மின் நிலையம் அமைவது எப்போது?

வட்டத் தலைநகராக விளங்கும் நீடாமங்கலம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் நிலவும் குறைந்தழுத்த மின் விநியோகப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில்
Updated on
1 min read

வட்டத் தலைநகராக விளங்கும் நீடாமங்கலம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் நிலவும் குறைந்தழுத்த மின் விநியோகப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், நீடாமங்கலத்தில் துணை மின்நிலையம் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.   
 நீடாமங்கலத்தில் மாநில அரசு அலுவலகங்கள், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், ரயில் நிலையம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், ஏராளமான சிறு வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
  ஆனால், இங்கு துணை மின்நிலையம் இல்லை. கோயில்வெண்ணி துணை மின்நிலையம் மூலமே நீடாமங்கலம் பேரூராட்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் மின் விநியோகம் பெறுகின்றன. இதனால், இப்பகுதிகளில் குறைந்தழுத்த மின் விநியோகப் பிரச்னை, தொடர் பிரச்னையாக நீடித்து வருகிறது.
  குறைந்த அழுத்த மின் விநியோகத்தால், குடியிருப்புகளில் உள்ள மின்விசிறிகள்கூட சரிவரி இயங்குவதில்லை, மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால், பொதுமக்கள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினரும், பல்வேறு வகையிலான அவதிக்குள்ளாக நேரிடுகிறது. மேலும்,தினமும் 8 மணி நேர மின்தடையும் இப்பகுதிகளில் வழக்கமானதாகி வருகிறது.  
   மக்கள் கோரிக்கையை ஏற்று, நீடாமங்கலத்தில் தனி துணை மின்நிலையம் அமைக்க கடந்த காலங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, துணை மின்நிலையம் அமைப்பதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை துணை மின்நிலையம் அமைக்கப்படவில்லை.
  இதுதொடர்பாக நீடாமங்கலம் வர்த்தகர் சங்க தலைவர் பி.ஜி.ஆர்.ராஜாராமன் கூறியதாவது:
  நீடாமங்கலத்திற்கென்று தனி மின்சார பாதை வேண்டும், துணை மின்நிலையம் அமைக்க  வேண்டும் என பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கோரிக்கை முன்வைக்கப்படும் போது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது ஆனால், இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.
 தேவைக்கு அதிகமாகவே மின்சாரம் கிடைப்பதாகக் கூறப்படும் நிலையிலும், இங்கு மின்வெட்டு தொடர்ந்து வருகிறது. 6 மாதங்களுக்கு முன்பு, 5 மின்மாற்றிகளை அமைத்து குறைந்த அழுத்த மின்விநியோகப் பிரச்னைக்கு தீர்வு காண உள்ளதாக தெரிவித்தனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. நீடாமங்கலத்தில் துணை மின்நிலையம் அமைப்பதே இங்கு நிலவும் மின் விநியோகப் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வாக இருக்கும் என்றார் அவர்.
  மின் தேவை, மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாகி விட்ட நிலையில், மின் விநியோகக் குறைபாடுகளுக்கு நிரந்தர தீர்வு காண, நீடாமங்கலத்தில் புதிய துணை மின் நிலையம் அமைக்க விரைவான நடவடிக்கைகள் வேண்டும் என்பது மக்கள் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com