திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள திருமக்கோட்டை, திருமேணி ஏரிப்பகுதியில் தமிழக அரசின் சார்பில் கட்டித் தரப்பட்ட நரிக்குறவர் காலனியில் உள்ள வீடுகள் அனைத்தும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன.
அசம்பாவிதச் சம்பவங்கள் நடைபெறும் முன்னர் புதிய வீடுகள் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அச்சமூகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார்குடியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது திருமக்கோட்டை ஊராட்சி. ஊரின் தொடக்கத்திலேயே உள்ளது திருமேணி ஏரி. இதன் அருகில் அமைந்துள்ளது நரிக்குறவர் சமூகத்தினருக்கான காலனி. இந்தப் பகுதி திருமக்கோட்டை ஊராட்சியின் 1-ஆவது வார்டைச் சேர்ந்ததாகும்.
இப்பகுதியில் சுமார் 75 ஆண்டுகளுக்கும் மேலாக நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கூடாரம் அமைத்து வாழ்ந்து வந்தனர். கடந்த 1980-ஆம் ஆண்டு காலகட்டத்தில் அப்போதிருந்த அதிமுக ஆட்சியில், ஏரிக்கரை புறம்போக்கு இடத்தை, நத்தம் புறம்போக்கு என துறைவாரியாக சட்டப்படி மாற்றி, அதில் நிரந்தரமாக நரிக்குறவர்கள் வசிக்கலாம் என உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, கூடாரமாக இருந்த இருப்பிடம் குடிசை வீடுகளாக மாறியது.
கடந்த 1991-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில், நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் 54 குடும்பங்களுக்கு அரசின் சார்பில் தலா 3 செண்ட் நிலம் இலவசமாக தந்து, அதற்கான பட்டாவும் வழங்கப்பட்டது. மேலும், எஸ்.சி., எஸ்.டி. மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் குடிசை வீடுகள் அகற்றப்பட்டு,சிமென்ட் வீடுகள் கட்டித் தரப்பட்டு நரிக்குறவர் காலனி அமைந்தது.
தற்போது இங்கு 200 குடும்பங்களைச் சேர்ந்த 525-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் 315 பேருக்கு ஓட்டுரிமை உள்ளது.
இந்த காலனிக்கு அருகிலேயே அங்கன்வாடி மையம், ஊராட்சி தொடக்கப்பள்ளி ஆகியவை செயல்பட்டு வருகின்றன. சாலை, மின், குடிநீர், குடும்ப அட்டை, வங்கியில் கணக்கு என அடிப்படை வசதிகள் செய்துத் தரப்பட்டுள்ளன.
நரிக்குறவர் காலனியில் உள்ள 54 வீடுகளும் முறையான பராமரிப்பு இல்லாததால், அனைத்து வீடுகளின் முன்பக்க இரும்பு கதவுகள் மழை, வெயிலால் துருப்பிடித்து தேசமடைந்துள்ளன.
பல வீடுகளில் முன்பக்கக் கதவு இல்லாததால், சேலை, போர்வைக் கொண்டு மறைத்து வைத்துள்ளனர். வீடுகளின் மேல்தள சிமென்ட் பூச்சுக் காரைகள் பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. சில வீடுகளில் சிமென்ட் சுவர் பெயர்ந்து விழுந்துள்ளதால், விளம்பரப் பதாகைகளை மறைவுக்காக கட்டிவைத்துள்ளனர். தரையுடனான பிடிமானம் இல்லாது, எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில்தான் வீட்டின் சுவர்களின் நிலை உள்ளது.
இதுகுறித்து அங்கு பெட்டிக்கடை நடத்தி வரும் அந்த சமூகத்தைச் சேர்ந்த அ. சேகர் கூறியது:
விலங்குகள், பறவைகள் வேட்டையாடுவது, விவசாயம், கட்டுமானத் தொழில்களுக்கு கூலி வேலைக்கு செல்வது, பாசிமணி, ஊசி என கைவினைப் பொருள்கள் விற்பனை செய்வதுதான் எங்களின் தொழில். வேட்டையாடுவது உணவுக்காகத்தான். மற்றபடி கூலி வேலையின் மூலம் கிடைக்கும் மிக சொற்ப தொகையில்தான் குடும்பம் நடத்திட வேண்டும். இந்த பணத்தை மிச்சம் பிடிக்க வாய்ப்பே இல்லை. மழை மற்றும் வேலை இல்லாத நாள்களில் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகிறோம். பிறகு எப்படி எங்களால் வீட்டை செலவு செய்து மராமத்துப்பணி செய்ய முடியும் என்றார்.
நரிக்குறவர் சமூகத்தின் தலைவர் கோ. நாகூரான் கூறியது: எங்கள் சமுதாய மக்களையும் அழைத்துச் சென்று மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சியர், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய இடங்களில் பலமுறை மனு அளித்துள்ளோம். ஒருசில முறை அதிகாரிகள், தொகுதி எம்எல்ஏ, ஒன்றியக் குழுத் தலைவர் ஆகியோர் தனித்தனியே வந்து காலனியைப் பார்வையிட்டு ஆய்வு செய்து சென்றுள்ளனர்.
கடந்த ஆண்டு புதிய வீடு கட்டித் தருவதற்கான பூர்வாங்க வேலைகள் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் தொடங்கியது என்ன காரணத்தினாலோ அந்த பணி நிறுத்தப்பட்டு விட்டது. பொருளாதாரத்தில் மிகவும் விளிம்பு நிலையில் உள்ளவர்கள் நாங்கள், மத்திய, மாநில அரசுகள் புதிதாக வீடு கட்டிக்கொள்ள ஆகும் செலவை முழுமையாக அளித்து உதவினால்தான் இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்றார்.
இதுகுறித்து கோட்டூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் தேவராஜன் கூறுகையில், இக்குடியிருப்பில் உள்ளவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுவிட்டதால், தனிநபருக்குச் சொந்தமான இடமாக மாறி விடுகிறது. எனவே, புதிதாக வீடு கட்டித் தர நிர்வாக ரீதியாக முடியாது.
எம்எல்ஏ, எம்பி நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான கடிதம், நிதி ஆகியவற்றை ஊராட்சி நிர்வாத்திடம் சம்பந்தப்பட்டவர்கள் வழங்கினால் உடனடியாக வீடு கட்டித் தரப்படும் என்றார்.
2016- வரை, 5 ஆண்டுகள் கோட்டூர் ஒன்றியக்குழுத் தலைவராக இருந்த வீ. ஜீவானந்தம் கூறியது:
திருவாரூர் மாவட்டம் முழுவதுக்கும் 54 வீடுகளுக்கு வழங்கப்பட்ட நிதியில், திருமேணி ஏரி நரிக்குறவர் குடியிருப்புக்கு முதல் கட்டமாக 10 வீடுகளுக்கு நிதி வழங்குவதாகத் தெரிவித்தோம். அந்த சமூகத்தினரிடையே ஒருமித்த கருத்து எட்டப்படாததால், அந்த நிதி வேறு பகுதியில் தொகுப்பு வீடு கட்டுவதற்கு வழங்கப்பட்டு விட்டது. தொடர்ந்து இதுகுறித்து அமைச்சர் ஆர். காமராஜிடம் பேசி வருகிறேன். விரைவில் புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என்றார்.
தொகுதி எம்எம்ஏ டி.ஆர்.பி. ராஜா கூறியது:
கடந்த 2012-ஆம் ஆண்டு தொகுதி நிதியிலிருந்து நரிக்குறவர்கள் வீட்டினை புதுப்பித்துக்கொள்ள 54 வீடுகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக மாவட்ட நிர்வாகத்துக்கு கடிதம் எழுதினேன். என்ன காரணத்தினாலோ அந்த நிதியை மாவட்ட நிர்வாகம் வாங்கிக்கொள்ளவில்லை. இப்போதுகூட என்னுடைய தொகுதி நிதி, மாநிலங்களவை உறுப்பினர்கள் நிதியிலிருந்து, வீடு கட்ட நிதி வாங்கித் தர தயாராக இருக்கிறேன். இதில் கட்சி அரசியல் பார்க்கக் கூடாது என்றார்.
நாகை மாவட்டம், பொறையாறில் அரசுப் போக்குவரத்துக்கழகப் பணிமனை கட்டடம் இடிந்து விழுந்து உயிரிழப்பு ஏற்பட்டதைப்போல், அசம்பாவிதச் சம்பவம் நிகழாமல் இருக்கவும், மழைக்காலம் தொடங்கிவிட்ட காரணத்தினாலும், நரிக்குறவர் மக்கள் படும் வேதனைக்கு நிரந்தத் தீர்வு காணும் வகையில், எந்த வகையிலாவது நிதியைப் பெற்று, திருமக்கோட்டை, திருமேணி ஏரியில் உள்ள நரிக்குறவர் காலனி வீடுகளை அப்புறப்படுத்திவிட்டு, புதிய குடியிருப்புகள் கட்டித் தர வேண்டும் என்பதே அந்தச் சமூக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருப்பு பக்கா கமர்சியல் திரைப்படம்: ஆர். ஜே. பாலாஜி

மசோதாவை எதிர்த்தால் மோசமான விளைவுகள்: மக்களவையில் மோடி பேச்சு

தேசியவாதம் பற்றி பாடம் எடுக்க தேவையில்லை! பாஜக எம்பிக்கு ஆ. ராசா பதிலடி!

ஜனநாயகன் படத்தை கேபிள் டிவி, இணையதளங்களில் வெளியிட இடைக்கால தடை!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

