தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

மாவட்ட தலைமை மருத்துவமனை மேம்படுத்தப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

மன்னார்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Updated On :26 நவம்பர் 2017, 7:46 pm

மன்னார்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
 மன்னார்குடி நகராட்சி 150 ஆண்டுகள் கடந்த பழைமையான நகராட்சி என பெயர் பெற்று விளங்குவதுபோல், மன்னார்குடி அரசு மருத்துவமனையும் நூற்றாண்டை கடந்த மருத்துவமனையாகும். மிக சாதாரண கட்டடத்தில் செயல்பட்டு வந்த இந்த மருத்துவமனை, கடந்த 1972-ஆம் ஆண்டு, திமுக ஆட்சி காலத்தில், இந்த பகுதியைச் சேர்ந்த மன்னை ப. நாராயணசாமி தமிழக அமைச்சராக இருந்த போது, புதிய கட்டடம் கட்டப்பட்டு கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர்.இதைத்தொடர்ந்து, அவ்வப்போது சிறு, சிறு மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்ட வந்தன.
திருவாரூரில் கடந்த 2010-ஆம் ஆண்டு  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டதையடுத்து, மன்னார்குடி வட்ட அரசு மருத்துவமனை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு,  உள்நோயாளிகளுக்கென தனித்தனி வார்டுகள், மகப்பேறு மருத்துவப் பிரிவு ஆகியவை தொடங்கப்பட்டன.
ஆனால் நரம்பியல், இருதயம், சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய பிரிவுகளுக்கு  தனி மருத்துவர்கள் இல்லை. மேலும், அவசர கிசிச்சைப் பிரிவும், பொது மருத்துவர் பிரிவும் இல்லை. 7 ஆய்வக உதவியாளர்கள் பணியிடம் உள்ள நிலையில், 2 பேர் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளனர். அறுவை சிகிச்சைக்காக நவீன கருவிகள் இல்லாத நிலை உள்ளது. 
 இதுகுறித்து சமூக ஆர்வலர் மன்னார்குடி இ.ஜோதிராமலிங்கம் கூறியது:
இந்த மருத்துவமனையில் திடக்கழிவு மேலாண்மை செயல்பாட்டில் உள்ளது. ஆனால், திரவக் கழிவுக்கு எரிகலன் வசதி போன்ற கழிவு மேலாண்மை முழுமையாக இல்லை. மருத்துவமனையில் எய்ட்ஸ், காசநோய் போன்றவற்றிற்காக நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்படும் மாதிரிகள் ஆய்வகப் பரிசோதனை முடிந்தபின், மருத்துவமனையில் உள்ள கழிவுநீர் சேமிப்பு தொட்டியில் கொட்டப்படுகின்றன. இந்த தொட்டி மிக சிறிதாக இருப்பதால், அதிலிருந்து வெளியேறும் கழிவுநீர், மருத்துவமனைக்கு வெளியே சாலையில் பெருக்கெடுக்கிறது.  இதனால், நோய் தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளது என்றார்.
 சி.ஐ.டி.யு. நகரக் குழு நிர்வாகி ஜி.ரெகுபதி கூறியது:
விபத்தில் சிறு காயமடைந்தவர்களுக்கு முதலுதவி செய்து, தஞ்சை அல்லது திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பும் நிலைதான் இங்கு உள்ளது. மூத்தக்குடிமக்களுக்கு என தனிப்பிரிவு இல்லாததால், அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சைப் பெற வேண்டியதாக இருக்கிறது. 
விபத்து மற்றும் தலைகாயம் சிகிச்சைப் பிரிவுக்காக ரூ.3 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட்டு, திறக்கப்படாமல் உள்ளது. இதற்கு தீர்வு காண்பதுடன் இங்கு எக்ஸ்ரோ, இசிஜி மற்றும் பரிசோதனை நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றியச் செயலர் எஸ். பாப்பையன் கூறியது:
புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள கட்டடத்துக்கு, புறநோயாளிகள் பிரிவு மற்றும் எக்ஸ்ரே பிரிவுகளை மாற்ற இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு மாற்றக் கூடாது. உள்நோயாளிகள் பிரிவுக்கு அருகிலேயே எக்ஸ்ரே பிரிவு இருந்தால்தான் நல்லது. இதை மாடிக்கு மாற்றினால் பழைய கட்டத்திலிருந்து புதிய கட்டடத்துக்கு நோயாளிகளை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுவதுடன், நோயாளிகளும் பாதிப்புக்குள்ளாவார்கள் என்றார்.
 தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க மாநிலத் தலைவர் வி.கோவிந்தராஜ் கூறியது:
 மருத்துவர் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறோம். அரசு மெத்தப் போக்குடன் நடந்து வருகிறது. இக்கோரிக்கையை வலியுறுத்தி டிசம்பர் மாதம் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்த உள்ளோம். மருத்துவர் அறை, நோயாளிகள் அறை, ஆய்வகம், தொழில்நுட்பம் என ஒவ்வொன்றுக்கும்  வெவ்வேறு மாதிரியான உள்கட்டமைப்புடன் கட்டுமானப்பணி அமைந்திருக்கும். இதனால், எக்ஸ்ரே பிரிவை வேறு உள் கட்டமைப்பு உள்ள இடத்துக்கு மாற்றினால் கதிர்வீச்சு வெளியேறும் ஆபத்து உள்ளது என்றார்.
இக்குற்றச்சாட்டு குறித்து மருத்துவமனையின் தலைமை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெ.அசோகன் கூறியது:
 புதிய கட்டடம் கட்டும் பணி முடிக்கப்பட்டு,  நவ.10-ஆம் தேதி பொதுப்பணித் துறை, சுகாதாரத் துறையிடம்  ஒப்படைக்கப்பட்டுவிட்டது. தற்போது மருத்துவமனையில் 18 மருத்துவர்கள் உள்ளனர். காலியாக உள்ள மருத்துவர்கள், தொழில்நுட்ப, ஆய்வக உதவியாளர்கள், மருந்தாளுனர்கள், செவிலியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசுக்கு கருத்துரு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. விரைவில் பொதுமக்கள் முன்வைக்கும் அனைத்து பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.