தமிழகத்தில் பெட்ரோலிய ரசாயன மண்டலம் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நடைபெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 24 -ஆவது மாநாட்டின் 2-ஆம் நாளான வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
சட்டப்படி வயது வந்த இருவர் மனம் இசைந்து திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தால் அவர்களின் குடும்ப அனுமதியோ, சாதி சமூகத்தின் அனுமதியோ தேவையில்லை என உச்சநீதிமன்றம் தெளிவாகக் கூறியிருக்கிறது. அத்துடன் ஆணவ கொலைகளைத் தடுப்பதுக்காகவும், பாதிக்கப்படுகிறவர்களுக்கு நிவாரணம் அளிப்பதுக்காகவும், அக்குற்றங்களில் ஈடுபடுவோரை சட்டப்படி தண்டிப்பதுக்காகவும் சிறப்பு சட்டம் ஒன்றை நாடாளுமன்றம் இயற்ற வேண்டும் எனவும் பரிந்துரை செய்துள்ளது. இதுபோன்றதொரு சட்டம் இயற்றப்படும் வரை மத்திய, மாநில அரசுகள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது. இதை ஏற்று காலதாமதப்படுத்தாமல் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தடுத்து, அதில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டணை வழங்கிடும் வகையில், உரிய சட்ட நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.
நீலகிரி மாவட்டம், கூடலூரில் ஜென்மம் என்ற பெயரால் உள்ள நிலங்களை சட்டத்திருத்தம் செய்து 52 ஆயிரம் ஏக்கர் நிலத்துக்கு பட்டா வழங்கவும், தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள குடும்பங்களைப் பாதுகாத்திடவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு, பாறை எரிவாயு, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்டவற்றை எடுத்து பெட்ரோலிய மண்டலமாக ஆக்குவதற்காக மத்திய அரசு அளித்துள்ள அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
உலக வரலாற்றில் இடம் பெற்றுள்ள ஆறு முதன்மை மொழிகளில் முதலிடம் பெறக் கூடிய தொன்மையும், இலக்கியச் செழுமையும் பெற்றுள்ள தமிழ்மொழிக்கான இடம் தமிழ்நாட்டில் சுருங்கி வருவது வேதனையளிக்கிறது.
கல்வி என்றால் அது ஆங்கில வழிக் கல்வி தான் என்ற நிலை இங்கே நிலவுகிறது. கர்நாடகம், கேரளம், தெலங்கானா மாநிலங்களில் அனைத்து வகை பள்ளிகளிலும் அம்மாநில மொழிப்பாடம் கட்டாயம் என அந்தந்த மாநில அரசுகள் அரசாணை பிறப்பித்துள்ளன. தமிழ்நாட்டிலும் அத்தகைய அரசாணை 2007 -ஆம் ஆண்டிலேயே பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், அதை முழுமையாக அமல்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது. எனவே, அனைத்து வகைப் பள்ளிகளிலும் தமிழை ஒரு பாடமாக கட்டாயம் கற்பிக்கும் வகையில் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை உருவாக்கியுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பு, நீராதார பாதிப்பு ஆகியவற்றால் பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். இந்த சூழ்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் செய்து வரும் தனது இரண்டாவது விரிவாக்கப் பணிகளை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் பெரும்பாலான பொதுமக்களுக்குச் சொந்த வீடில்லை. கோடிக்கணக்கான ஏழை மக்களுக்குச் சொந்த வீடு வழங்கும் சிறப்புத் திட்டத்தை தமிழ்நாடு அரசு வகுக்க வேண்டும். திருமணமான தம்பதியரை "ஒரு குடும்பம்' என வரையறுத்து, எட்டு சென்ட் வீட்டுமனையும், வீடு கட்டுவதற்கான தொகையை நீண்டகால கடனாகவும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் வரலாற்றுத் தொன்மையை உலகுக்குத் தெரிவிக்கக்கூடிய தொல்லியல் அகழாய்வுகளை நடத்துவதில் மத்திய அரசு அலட்சியப் போக்குடன் செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெருந்துணை செய்பவை பொதுத்துறை வங்கிகளாகும். இவற்றை தனியார் மயமாக்க வேண்டும் என்ற கூக்குரல் எழுப்பப்பட்டு வருகிறது. வாராக் கடன்களில் 80 சதவீதத் தொகையை கார்ப்பரேட் முதலாளிகளே வாங்கியுள்ளனர். திருப்பித் தராததை, கிரிமினல் குற்றமாகக் கொண்டு, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுத்துறை வங்கிகளை நெருக்கடியிலிருந்து மீட்டு வலுப்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற பிரதிநிதிகள் விவாதக் கூட்டத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 650 பிரதிநிதிகளும், 65 மாற்றுப் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
இதில் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா, தேசியக்குழு உறுப்பினர்கள் ஆர். நல்லகண்ணு, தா. பாண்டியன், மாநிலச் செயலர் இரா. முத்தரசன், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி. மகேந்திரன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஜி. பழனிச்சாமி, மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் எம். செல்வராஜ், மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவர் வை. சிவபுண்ணியம், செயலர் வை. செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஐபிஎல் 2026: ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த ரியான் பராக்!

திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்!
மேற்கு வங்கம்: மழையிலும் வாக்களிக்க வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

பொதுத்துறை நிறுவன மருத்துவமனையில் பாராமெடிக்கல் பணிகள்: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

