திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ரயில் நிலைய இருப்புப் பாதையில் போக்குவரத்து நெருக்கடியைத் தவிர்க்கும் பொருட்டு மேம்பாலம் அமைக்கும் திட்டம் புத்துயிர் பெறுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நீடாமங்கலம் தாலுகாவின் தலைநகரம். தவிர, பேரூராட்சி தலைமையிடமாகவும், ஊராட்சி ஒன்றியத்தின் தலைமையிடமாகவும் திகழ்கிறது. இங்கு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றமும், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறை அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளும், நூற்றுக்கணக்கான சிறு வர்த்தக நிறுவனங்களும் உள்ளன. நீடாமங்கலத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
சாலை போக்குவரத்து: கர்நாடகம், கேரளம் போன்ற வெளி மாநிலங்களிலிருந்தும், திருச்செந்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவை, சேலம், மதுரை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலிருந்தும் நாள்தோறும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் நீடாமங்கலம் வழியாக திருவாரூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, காரைக்கால் முதலிய ஊர்களுக்குச் செல்கின்றன.
இதேபோல், அதிராம்பட்டினம், வேதாரண்யம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி முதலான ஊர்களிலிருந்தும் நீடாமங்கலம் வழியாக கும்பகோணம், வேலூர், திருவண்ணாமலை, சென்னை, புதுச்சேரி, திருப்பதி முதலான நகரங்களுக்கும் நாள்தோறும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுமட்டுமன்றி, நூற்றுக்கணக்கான லாரிகளும், இருசக்கர வாகனங்களும் நீடாமங்கலத்தைக் கடந்து செல்கின்றன.
ரயில் மார்க்கம்: ரயில் மார்க்கத்தைப் பொறுத்தமட்டில், காரைக்கால்- திருச்சி பயணிகள் ரயில்கள், மன்னார்குடி- மானாமதுரை பயணிகள் ரயில், மன்னார்குடி- மயிலாடுதுறை பயணிகள் ரயில், மன்னார்குடியிலிருந்து சென்னை செல்லும் மன்னை விரைவு ரயில், மன்னார்குடியிலிருந்து கோவை செல்லும் செம்மொழி விரைவு ரயில் மற்றும் காரைக்காலிலிருந்து நாகப்பட்டினம், திருவாரூர் வழியாக கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் விரைவு ரயில் ஆகியவை நாள்தோறும் நீடாமங்கலம் வழியாகத்தான் இயக்கப்படுகின்றன.
இவை தவிர வாரந்தோறும் இயக்கப்படும் மன்னார்குடி- திருப்பதி வாராந்திர விரைவு ரயில், மன்னார்குடி- ஜோத்பூர் விரைவு ரயில், காரைக்கால்- வாஸ்கோடகாமா விரைவு ரயில் ஆகிய ரயில்களும் நீடாமங்கலம் வழியாகத்தான் சென்று வருகின்றன.
சரக்கு ரயில்கள்: காரைக்காலிலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில் நீடாமங்கலம் வழியாக தூத்துக்குடிக்கும், பல்வேறு மாவட்டங்களிலிருந்து உரம் ஏற்றிச்செல்லும் சரக்கு ரயில், நெல் கொள்முதல் காலங்களில் பல்வேறு ஊர்களிலிருந்து லாரிகள் மூலம் நெல் மூட்டைகளைச் சுமந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்லும் சரக்கு ரயில்கள் என சரக்கு ரயில் போக்குவரத்தும் நீடாமங்கலம் வழியாகத்தான் நடைபெறுகின்றன.
போக்குவரத்து நெருக்கடி: இதன் காரணமாக நீடாமங்கலத்தில் இருப்புப் பாதை மூடப்படும் போதெல்லாம், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. குறிப்பாக, நீடாமங்கலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் நீடாமங்கலம் இருப்புப் பாதை, தஞ்சை சாலையில் ஒரத்தூர் இருப்புப் பாதை, ஆதனூர் இருப்புப் பாதை, நீடாமங்கலம்- திருவாரூர் சாலையில் வையகளத்தூர், கப்பலுடையான் இருப்புப் பாதை என 5 இருப்புப் பாதைகள் உள்ளன.
இந்த இருப்புப் பாதைகள் மூடப்படும் போதெல்லாம் நெடுஞ்சாலைப் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.
இதனால், திருச்சி, தஞ்சாவூரிலிருந்து நீடாமங்கலம் வழியாக திருவாரூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலைப் பயணிகள் அவதிக்குள்ளாவது அன்றாட வாடிக்கையாகி விட்டது. இந்த நெடுஞ்சாலைப் பகுதியில் பயணம் செய்யும் அமைச்சர்கள், உயரதிகாரிகள், அரசு அலுவலர்களும் போக்குவரத்து நெருக்கடியால் அவதிப்படுவது சர்வசாதாரணமாக நிகழக்கூடிய ஒன்று.
நீடாமங்கலத்தில் இருப்புப் பாதை மூடப்படும் நேரம் நாளொன்றுக்கு சராசரியாக 7 மணிநேரம் என்றும், அந்த நேரங்களில் எல்லாம் நெடுஞ்சாலைப் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது என்றும், அதற்கான மாற்று வழியாக புறவழிச்சாலை திட்டம் கொண்டுவர வேண்டும் எனவும் கடந்த 30 ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக மத்திய அரசு சார்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு நீடாமங்கலம் புறவழிச்சாலை திட்டத்துக்கென முதல்கட்டமாக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர், திருச்சி முதல் நாகப்பட்டினம் வரையிலான நான்கு வழிச்சாலை திட்டத்தால், புறவழிச்சாலை திட்டம் கைவிடப்பட்டது. அதோடு, நான்கு வழிச்சாலைத் திட்டமும் திருச்சி முதல் தஞ்சாவூர் வரை நிறைவேற்றப்பட்டது. எனினும், நிதிப் பற்றாக்குறை காரணமாக நான்கு வழிச்சாலை திட்டம் இரண்டு வழிச்சாலை திட்டமாக அறிவிக்கப்பட்டு, அந்த பணியும் பல்வேறு காரணங்களால் சரிவர நடைபெறாமல் தொய்வு ஏற்பட்டுள்ளது.
மேம்பாலம்: நீடாமங்கலம் போக்குவரத்து நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பேரவையில் விதி எண் 110-இன்கீழ், ரூ. 20 கோடி ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து, தமிழக நெடுஞ்சாலை துறையினர் அதற்கான திட்ட மதிப்பீட்டை தயார்செய்து மேம்பாலம் அமைவதற்கான வரைபடத்தையும் தயாரித்தனர். அத்துடன், ரயில்வே உயரதிகாரிகளும், தமிழக நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களும் வரைபடத்தைக் கொண்டு மேம்பாலம் அமைய வாய்ப்புள்ள பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மேம்பாலம் அமைய சில ஆண்டுகள் ஆகலாம் என்றும், கீழ்ப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உத்தரவாதம் அளித்தனர். மத்திய அரசும் ரூ.44.47 கோடியை நீடாமங்கலம் மேம்பாலப் பணிக்காக ஒதுக்கீடு செய்தது. ஆயினும், மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறவில்லை. காரணம், மேம்பாலம் அமையும் பகுதியில் (ஒரத்தூர் கிராமம்) நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் உள்ளதால், அதற்கான நிலம் பாதிப்படையும் என கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகம் மூலம் அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டதால் மேம்பாலப் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மாவட்ட ஆட்சியர் ஆய்வு: இந்தச் சூழலில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் நீடாமங்கலத்தில் மேம்பாலம் அமைய உள்ள இடத்தில் அண்மையில் ஆய்வு செய்தார். இதனால், இத்திட்டம் புத்துயிர் பெறும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
அதேவேளையில், தஞ்சாவூர்- நாகப்பட்டினம் இரு வழிச்சாலை திட்டம் மற்றும் நீடாமங்கலம் மேம்பால திட்டம் ஆகியவற்றுக்கு மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கிய நிதி என்னவாயிற்று என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எனவே, பொதுமக்களின் மனநிலையை உணர்ந்து மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 5 வரை சென்னை, வேலூரில் கடும் வெப்ப நிலை நிலவும்!

அதிரடியாக உயர்ந்த வர்த்தக சிலிண்டர் விலை: எவ்வளவு?

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 8 மாவட்டங்களில் மழை!

காணாமல் போன குழந்தைகள் மீட்டெடுக்க சட்ட தன்னாா்வ தொண்டா்களுக்கு அழைப்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

