இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்

பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்

Updated On :23 ஜனவரி 2019, 5:47 am IST

பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஜாக்டோ-ஜியோ சார்பில் திருவாரூர், மன்னார்குடி, நீடாமங்கலம், வலங்கைமான் உள்ளிட்ட 7 இடங்களில் வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டம் நடை
பெற்றது.  
இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், ஏழாவது ஊதியக்குழு நிலுவைகளை உடனடியாக வழங்க வேண்டும், தொகுப்பூதிய முறையை ரத்து செய்து பணியாளர்கள் அனைவரையும் நிரந்தரம் செய்ய வேண்டும், தொடக்கப் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், அங்கன்வாடி பள்ளிகளுக்கு கற்பித்தல் பணிகளுக்காக பயிற்சி பெற்ற ஆசிரியர்களை பணி நியமனம் செய்யாமல், இடைநிலை ஆசிரியர்களை கட்டாய மாறுதல் செய்வதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளில் பணியாற்றும் 5,077 ஆசிரியர்களில் 4,086 பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதேபோல் அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் சுமார் 2,215 பேரும் மற்றும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால், பள்ளி மற்றும் அரசு அலுவலகங்களில் குறைந்த அளவில் பணியாளர்கள் பணிக்கு வந்திருந்தனர். திருவாரூர் மாவட்டத்தில் ஏழு இடங்களில் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளான தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலர் செளந்தரராஜன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் ஈவேரா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் சோமசுந்தரம், பட்டாதாரி ஆசிரியர் சங்க மாவட்டச் செயலர் முத்துவேல், மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்டச் செயலர் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வெறிச்சோடிய அரசு அலுவலகங்கள்...
நீடாமங்கலத்தில் ஜாக்டோ- ஜியோ போராட்டத்தால் பெரும்பாலான அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
நீடாமங்கலம் பழைய தாலுகா அலுவலகம் எதிரே ஜாக்டோ- ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரா. தமிழரசன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் எஸ். தமிழ்ச்செல்வன், கிராம ஊராட்சி செயலர்கள் சங்க மாவட்டச் செயலாளர் குரு. செல்வமணி, ஒருங்கிணைப்பாளர் நா.கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், அரசு ஊழியர் சங்க வட்ட நிர்வாகிகள் இளமாறன், வசந்தன், அரசு பணியாளர் சங்க நிர்வாகி சந்திரசேகரன், ஆசிரியர்கள் மாரிமுத்து, ராஜேஷ்குமார் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த போராட்டத்தால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட பெரும்பாலான அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதேபோல், வலங்கைமானில் ஜாக்டோ- ஜியோ அமைப்பின் வட்ட ஒருங்கிணைப்பாளர்கள் புஷ்பநாதன், வேல்முருகன், தேவராஜன், கணேசன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 400-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டம்...
மன்னார்குடியில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கிய ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னார்குடி வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் வி. சின்னையன், தமிழக ஆசிரியர் கூட்டணியின் வட்டாரச் செயலர் ரா. முருகையன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஜாக்டோ- ஜியோ அமைப்பின் உயர்மட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் பா. பஞ்சாபகேசன், அ. முரளி, ரா. சத்தியமூர்த்தி உள்ளிட்டோர்  கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.  இந்த போராட்டத்தால் மன்னார்குடி, கோட்டூர் கல்வி வட்டாரங்களில் அரசுப் பள்ளிகள் முழுமையாக செயல்படவில்லை. வருவாய்த் துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறை அலுவலகங்களில் ஒருசிலர் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர். இதனால், பல்வேறு தேவைகளுக்காக அரசு அலுவலகங்களுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

நன்னிலத்தில்...
நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜெ. பிரகாஷ், டீ. அன்பரசன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். இந்த போராட்டத்தால் பள்ளிகள் முழுமையாக இயங்கவில்லை. அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி 
காணப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.