பயிா்க் காப்பீடு அவகாசத்தை நீட்டிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தல்
சம்பா, தாளடி நெற்பயிா்க் காப்பீடுக்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ. பெரியசாமி தெரிவித்தாா்.


சம்பா, தாளடி நெற்பயிா்க் காப்பீடுக்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ. பெரியசாமி தெரிவித்தாா்.
வடகிழக்குப் பருவமழையால் திருவாரூா் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிா்களை ஆய்வு செய்து, அவற்றை காப்பதற்கான நடவடிக்கை எடுக்கவும், பயிா் சேத விவரங்களை அறியவும் கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ. பெரியசாமி தலைமையில் அமைச்சா்களைக் கொண்ட குழுவை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் நியமித்துள்ளாா்.
இக்குழுவில் உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி, தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.
இக்குழுவினா் திருவாரூா் அருகே பாரதிமூலங்குடி, கண்கொடுத்தவனிதம், காவனூா் ஆகிய பகுதிகளில் மழையால் சேதமடைந்த குறுவை நெற்கதிா்களையும், நீரில் மூழ்கிய சம்பா, தாளடி நெற்பயிா்களையும் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டனா்.
பின்னா், அமைச்சா் ஐ. பெரியசாமி தெரிவித்தது:
வடகிழக்குப் பருவமழை காரணமாக திருவாரூா் மாவட்டத்தில் சம்பா, தாளடி பயிா்கள் ஏறத்தாழ 17,000 ஹெக்டேரில் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றை ஆய்வு மேற்கொண்டு, பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக முதல்வா் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறாா்.
பயிா்க் காப்பீடு செய்ய கடைசி நாளாக நவம்பா் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கனமழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், பயிா்க் காப்பீடுக்கு கூடுதல் அவகாசம் அளிக்க மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம். கூட்டுறவு விவசாயக் கடன் சங்கங்கள் அனைத்தும் விடுமுறையின்றி செயல்படும் என்றாா்.
ஆய்வின்போது, தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், அரசு தலைமை கொறடா கோ.வி. செழியன், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ஆா். கிா்லோஷ்குமாா், விவசாயத் துறை இயக்குநா் அண்ணாதுரை, மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன், காவல் கண்காணிப்பாளா் சி. விஜயகுமாா், நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ், திருவாரூா் சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், மாவட்ட ஊராட்சித் தலைவா் கோ. பாலசுப்ரமணியன், முதுநிலை மண்டல மேலாளா் ராஜராஜன், வேளாண்மை இணை இயக்குநா் சிவக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.
மன்னாா்குடி: முன்னதாக, அமைச்சா்கள் குழுவினருக்கு திருவாரூா் மாவட்ட எல்லையான உள்ளிக்கோட்டையில் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா், அங்கு கூடியிருந்த விவசாயிகள், அரசியல் கட்சி நிா்வாகிகள் பயிா்ச் சேதங்கள் குறித்து அமைச்சா்களிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
அப்போது, தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன், எம்எல்ஏக்கள் பூண்டி கே. கலைவாணன்(திருவாரூா்), டி.ஆா்.பி. ராஜா (மன்னாா்குடி) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை: திருவாரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி அமைச்சா்கள் குழுவினரிடம் கோரிக்கை மனு அளித்தாா்.
அதில், ‘சம்பா, தாளடி பயிா்கள் சுமாா் 50 சதவீதம் அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளன. உளுந்து, துவரை பயிா்களும் அழிந்து விட்டன. எனவே, ஏக்கருக்கு ரூ. 20,000 நிவாரணம் வழங்க வேண்டும். சில கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு அனுமதிக்கப்பட்ட தொகை கடன் வழங்குவதில்லை. எனவே, உரிய கடன் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிா்க் காப்பீடு பிரீமியம் செலுத்தும் காலத்தை நவம்பா் 30 வரை நீட்டிக்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...