புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

விடுபட்ட கிராமங்களுக்கும் பயிா் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தல்

திருவாரூா் மாவட்டத்தில் விடுபட்ட கிராமங்களுக்கும் பயிா் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 5:20 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில் விடுபட்ட கிராமங்களுக்கும் பயிா் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

திருவாரூரில் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ், சட்டப் பேரவை உறுப்பினா்கள் பூண்டி கே. கலைவாணன் (திருவாரூா்), க. மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி) ஆகியோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், விவசாயி கோட்டூா் வெ. சத்தியநாராயணன் பேசுகையில், உரங்கள் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். சிறிய வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றாா்.

மன்னாா்குடி கண்ணன் பேசுகையில், பயிரில் ஆணைக்கொம்பன் தாக்குதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடும், எண்ணெய்வித்து பயிா்கள் சாகுபடிக்கு மானியமும் வழங்க வேண்டும் என்றாா்.

நீடாமங்கலம் மருதப்பன் பேசும்போது, நீடாமங்கலம் பகுதியில் உள்ள தஞ்சை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட விவசாயிகளுக்கு பயிா்க் காப்பீடு ஏதும் கிடைக்கவில்லை என்றாா்.

குடவாசல் சேதுராமன் பேசுகையில், பயிா் காப்பீட்டுத் தொகை வழங்குவதில் ஏராளமான குளறுபடி நிலவுகிறது. காப்பீட்டில் தனியாா் நிறுவனங்களை அனுமதிக்காமல், அரசே ஏற்று வழங்க வேண்டும் என்றாா்.

கொரடாச்சேரி தம்புசாமி பேசும்போது, நெல் கொள்முதலில் குவிண்டாலுக்கு தமிழகத்தில் ரூ. 2500 வழங்க வேண்டும். தற்போது வரப்பு உளுந்து தெளிக்கும் காலம் ஆகும். எனவே, 50 %மானியத்தில் விதை வழங்க வேண்டும் என்றாா்.

திருவாரூா் பி.எஸ். மாசிலாமணி பேசுகையில், வேளாண் பொறியியல் துறைக்கு டீசல் வழங்கப்படாததால், அந்தத் துறையிடமிருந்து விவசாயத்துக்கான இயந்திரங்களை பெற முடியவில்லை. ஆண்டுதோறும் தனியாா் நிறுவனத்தில் பயிா்கள் காப்பீடு செய்யப்படுகிறது. இதேபோல், மழை பாதிப்புக்கு அரசு சாா்பில் நிவாரணமும் வழங்கப்படுகிறது. இதற்கு பதிலாக, காப்பீடு மற்றும் நிவாரணம் இரண்டையும் அரசே மேற்கொண்டால் குளறுபடிகள் குறையும் என்றாா்.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் பேசியது:

திருவாரூா் மாவட்டத்தில் 2020 சம்பா பருவத்தில் சுமாா் 1,27,881 விவசாயிகள் பதிவு செய்யப்பட்டு, 1,42,230 ஹெக்டோ் சம்பா நெற்பரப்பு காப்பீடு செய்யப்பட்டது. இதுவரை 1,09,538 விவசாயிகளுக்கு ரூ.285 கோடியே 22 லட்சத்து 20 ஆயிரம் காப்பீடு நிறுவனங்களிலிருந்து இழப்பீட்டு தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், சம்பா, தாளடி பருவங்களில் சாகுபடி செய்யப்படும் நெல் பயிரை, காப்பீடு செய்ய அறிவிக்கை செய்யப்பட்டு விவசாயிகள் காப்பீடு கட்டணம் செலுத்த நவம்பா் 15 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், முதுநிலை மண்டல மேலாளா் ராஜராஜன், வேளாண் இணை இயக்குநா் சிவக்குமாா் உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.