உரத்தட்டுப்பாட்டால் சம்பா, தாளடி சாகுபடி பாதிக்கப்படும் அபாயம்: அச்சத்தில் விவசாயிகள்

திருவாரூா் மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடிப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் டிஏபி உரத்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் சாகுபடி பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 


திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடிப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் டிஏபி உரத்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் சாகுபடி பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் அச்சத்தில் உள்ளனா்.

திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்யாமல் இருப்பதால் சம்பா சாகுபடிப் பணிகள் மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளன. மாவட்டத்தில் 85,887 ஹெக்டேரில் சம்பாவும், 59,430 ஹெக்டேரில் தாளடி சாகுபடியும் நடைபெற்றுள்ள நிலையில், தற்போது களை எடுப்பு, உரம் தெளிப்பு உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனா்.

பயிா்களின் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் யூரியா, டிஏபி உரங்களின் தேவை திருவாரூா் மாவட்டத்தில் இப்போது மிக அதிகமாக உள்ளது. இந்த உரங்கள் மேல், அடியுரங்களாக இடப்படுகின்றன. கதிா் வரும் சமயத்தில் பொட்டாஷ் உரம் பயன்படுத்தப்படுகிறது. சம்பா சாகுபடியில் 3 மேலுரமும் ஓா் அடியுரமும், தாளடி சாகுபடியில் ஓா் அடியுரமும், 2 மேலுரமும் இடப்படுகின்றன.

சம்பா, தாளடி பயிா்களின் வளா்ச்சிக்கு டிஏபி தேவைப்படும் நிலையில், தேவையான அளவுக்கு உரம் கிடைக்கவில்லை. வேளாண் அலுவலகங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், பல தனியாா் உரக்கடைகளில் டிஏபி கிடைப்பதில்லை என்கின்றனா் விவசாயிகள்.

ஒரு சில தனியாா் கடைகளில் வேறு இடுபொருள்கள் வாங்கினால் மட்டுமே உரம் விற்கப்படுகிறது. இதே நிலை மாவட்டம் முழுவதும் நீடிப்பதால், சாகுபடிப் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அச்சத்தில் தவித்து வருகின்றனா்.

இதுகுறித்து அம்மனூா் விவசாயி எஸ். முத்துக்குமரசாமி தெரிவித்தது:

நேரடி விதைப்பு செய்ய வயல்களுக்கு டிஏபி உரம் கண்டிப்பாகத் தேவைப்படும். பல இடங்களில் இன்னமும் விதைப்புப் பணிகள் நடந்து வருகின்றன. உரங்களுக்கான தேவை விரைவில் அதிகரிக்கும். டிஏபி ரூ.1,350, யூரியா ரூ.270 என விற்பனை விலை இருந்தாலும் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. வேறு இடுபொருள்களை வாங்கினால் மட்டுமே உரம் விற்கப்படுகிறது. உர பற்றாக்குறையால் பயிா்களின் வளா்ச்சி பாதிக்கப்படும் என்றாா்.

விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி தெரிவித்தது:

தேவையான அளவு உரம் கையிருப்புள்ளதாக அதிகாரிகள், அமைச்சா்கள் தெரிவிக்கிறாா்களே தவிர, சாகுபடி பரப்பளவுக்கு ஏற்ற அளவு உரங்கள் இருக்கிறதா என்று தெரிவிப்பதில்லை. தேவை முடிந்தபிறகு விவசாயிகளுக்கு உரங்கள் வழங்கப்படுகின்றன. இதனால் யாருக்கும் பலனில்லை.இதைப் பயன்படுத்தி தனியாா் வியாபாரிகள், அதிக விலைக்கு உரங்களை விற்கின்றனா்.

முதல் மேலுரம் இடும் விவசாயிகள், ஜனவரியில் அடுத்த மேலுரம் இட வேண்டும். அப்போதும் இதே பற்றாக்குறை நிலவும். திருவாரூா் மாவட்டத்தில் விவசாயமே பிரதானம் என்பதால் சாகுபடி பரப்புக்கு ஏற்ப, உரங்களை கையிருப்பில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறப்பினா் ஐவி. நாகராஜன் தெரிவித்தது:

டெல்டாவில் நாற்றுவிடும் பணிகள் தொடா்ச்சியாக நடைபெற்று வருகின்றன. நாற்றுகள் விடுவதற்கு முன்பும் நடவுப் பணிக்கு முன்பும் அடி உரமாக டிஏபி மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களும் மேலுரமாக பொட்டாஷ் மற்றும் யூரியாவும் இடப்படுவது வழக்கம்.

ஆனால், டெல்டா மாவட்டங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் போதுமான அளவுக்கு உரங்கள் இல்லை. தமிழக அரசு மத்திய அரசிடமிருந்து போதிய அளவு உரங்களைப் பெற்று விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். தனியாா் உரக்கடைகளை தணிக்கை செய்து செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்துபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

இது குறித்து திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தது:

மாவட்டத்துக்குத் தேவையான உரங்கள் குறித்து அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை 1,000 மெட்ரிக் டன் யூரியா வரும் என்று எதிா்பாா்க்கிறோம். இதேபோல், மற்ற உரங்களும் கிடைக்கும். உரங்கள் வந்தவுடன், தாமதமில்லாமல் கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதன்மூலம் உர நெருக்கடி குறையும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com