நீட் தேர்வில் சாதித்த அரசுப் பள்ளி மாணவிகள், திறந்த வேனில் ஊர்வலமாக அழைத்து வந்த பொதுமக்கள்
By DIN | Published On : 28th October 2022 08:52 PM | Last Updated : 28th October 2022 10:40 PM | அ+அ அ- |

உள்ளிக்கோட்டை அரசுப்பள்ளியில் படித்து மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்த மாணவிகளை திறந்த வேனில் ஊர்வலமாக அழைத்து வந்து பாராட்டு விழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த உள்ளிக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு சிறப்பு உள் ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த 2 மாணவிகளுக்கு பாராட்டு விழா இன்று (அக்டோபர் 28) நடைபெற்றது.
உள்ளிக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 வரை படித்த உள்ளிக்கோட்டை கோவிந்தராஜ், வனரோஜா ஆகியோரது மகள் லெட்சுமிபிரியா, தளிக்கோட்டை இளவரசன், சித்ராதேவி ஆகியோரது மகள் கீர்த்தனா ஆகியோர் மருத்துவப் படிப்புக்கான தகுதித் தேர்வான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.
இதனையடுத்து, அண்மையில் சென்னையில் நடைபெற்ற மருத்துவக் கல்லூரி தேர்வுக்கான கலந்தாய்வில் கலந்துகொண்ட இரண்டு மாணவிகளும் கலந்து கொண்டனர். தமிழக அரசின் சிறப்பு உள் ஒதுக்கீடு பிரிவின் கீழ் லெட்சுமிபிரியாவிற்கு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், கீர்த்தனாவிற்கு தஞ்சை மருத்துவக் கல்லூரியிலும் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது.
இதனையடுத்து ,பள்ளியின் சார்பில் லெட்சுமிபிரியா மற்றும் கீர்த்தனாவுக்கு பாராட்டு விழா இன்று (அக்டோபர் 28) நடைபெற்றது.
மன்னார்குடி, பட்டுக்கோட்டை பிரதான சாலை உள்ளிக்கோட்டை எம்ஜிஆர் சிலையிலிருந்து திறந்த வேனில் மருத்துவ மாணவிகள் லெட்சுமிபிரியா,கீர்த்தனா ஆகியோருக்கு மாலை அணிவித்து தாரை தப்படை முழங்க முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக பள்ளிக் கூட்டம் வரை அழைத்து வந்தனர். அப்போது சாலையில் இருபுறமும் நின்று பொதுமக்கள், அரசியல் கட்சியினர்,தன்னார்வு அமைப்பினர்,கிராம பொது நல கமிட்டியினர் மாணவிகளுக்கு மாலை,பொன்னாடை அணிவித்து வாழ்த்தினர்.
இதில்,பள்ளி மாணவர்களின் தப்பாட்டம், சிலம்பாட்டம், நாட்டு நலப்பணித்திட்டம், இளையோர் செஞ்சிலுவை சங்கம்,சாரணர் இயக்கம் ஆகியவற்றின் அணிவகுப்பு ஆகியவை நடைபெற்றது.
பள்ளிக் கூட்டத்தில் நடைபெற்ற நிகழச்சிக்கு தலைமை ஆசிரியர் ஜி.பாலாஜி தலைமை வகித்தார்.
மாணவிகளை பாராட்டி, உள்ளிக்கோட்டை ஒன்றியக்குழுத் தலைவர் க.ஜெயக்குமார், ஊராட்சி தலைவர்கள் ஆர்.ஜோதி (உள்ளிக்கோட்டை) ,பி.சரவணன் (தளிக்கோட்டை), பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பொ.கயல்விழி, பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் எம்.சரிதா,வர்த்தகர் சங்க தலைவர் அன்பரசன், அரசு ஊழியர் கூட்டமைப்பு தலைவர் பாலச்சந்திரன்,விழா ஒருங்கிணைப்பாளர் டி.இன்பரசன், ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
மருத்துவ மாணவிகள் ஜி.லெட்சுமிபிரியா, இ.கீர்த்தனா ஆகியோர் நன்றி தெரிவித்துப் பேசினர்.
இந்த பாராட்டு விழாவில் என்எஸ்எஸ் அலுவலர் எஸ்.ராஜேந்திரன், இளையோர் செஞ்சுலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் கே.ஞானசுந்தரி, சாரணர் இயக்க அலுவலர்கள் கே.ஜெயந்தி, ஜி.கலையரசி, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.