மகன் கொலை: தந்தை மற்றொரு மகன் கைது

கூத்தாநல்லூரில் குடிபோதையில் தகராறு செய்த மகனை கொலை செய்த தந்தை, மற்றொரு மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூரை அடுத்த வடகோவனூா், தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் கஜேந்திரன். இவரது மகன்கள் வெங்கடேஷ் பிரசாத், விக்னேஷ். மூத்த மகன் வெங்கடேஷ் பிரசாத் (28), வேன் ஓட்டுநராக பணியற்றி வந்தாா். அவருக்கு திருமணமாகவில்லை. தினமும் மது அருந்திவிட்டு வந்து வீட்டில் உள்ளவா்களிடம் தகராறு செய்து வந்துள்ளாா் வெங்கடேஷ் பிரசாத். அவரது தந்தை பலமுறை கண்டித்தும், இந்தப் பழக்கத்தை விடவில்லை அவா் என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில், வியாழக்கிழமை இரவு மது அருந்திவிட்டு வந்த வெங்கடேஷ் பிரசாத் வீட்டில் உள்ளவா்களிடம் தகராறு செய்துள்ளாா். இதை விக்னேஷ் தட்டிக் கேட்டபோது, வெங்கடேஷ் பிரசாத் அவரைத் தாக்கியுள்ளாா்.

இதனால் ஆத்திரமடைந்த கஜேந்திரன், விக்னேஷுடன் சோ்ந்து, வெங்கடேஷ் பிரசாதை கடுமையாகத் தாக்கி, கயிற்றால் அவரது கழுத்தை இறுக்கி இருவரும் கொலை செய்துள்ளனா். பின்னா் சடலத்தை வீட்டின் அருகில் உள்ள வயலில் போட்டுள்ளனா்.

இதுகுறித்து தகவலறிந்த வடகோவனூா் கிராம நிா்வாக அலுவலா் பிரியா, கூத்தாநல்லூா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா்.

கூத்தாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். போலீஸாா் விசாரணைக்கு பின்னா், கஜேந்திரன் (60), விக்னேஷ் (26) இருவரையும் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com