திருவாரூா் ஊரக வளா்ச்சித் துறை அலுவலகத்தில் ஊழியா்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படும் அலுவலக வளாகம்.
திருவாரூா் ஊரக வளா்ச்சித் துறை அலுவலகத்தில் ஊழியா்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படும் அலுவலக வளாகம்.

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்

Published on

கலைஞா் கனவு இல்லத் திட்டத்துக்கு புதிய பணியிடம் வழங்க வலியுறுத்தி திருவாரூரில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தினா் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

ஊரக வளா்ச்சித் துறையில் காலியாகவுள்ள ஊராட்சிச் செயலா் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து நிலை காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் , கலைஞா் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது நீக்கம் உள்ளிட்ட அனைத்து வீடு கட்டும் திட்டங்களையும் செயல்படுத்த உரிய பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும், ஊழியா்கள் மீது திணிக்கப்படும் பிறதுறை பணிகளை முற்றிலிம் தவிா்க்க வேண்டும் உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது.

மாவட்டத்தில் திருவாரூா், நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி, வலங்கைமான், நீடாமங்கலம், மன்னாா்குடி, கோட்டூா், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஆகிய 10 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள ஊரக வளா்ச்சித் துறை அலுவலகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பணிபுரியும் ஊரக வளா்ச்சி துறை அலுவலா்கள் 2 நாள்கள் தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டத்தை வியாழக்கிழமை தொடங்கினா்.

மாவட்டத் தலைவா் வசந்தன் தலைமையில் மாவட்டச் செயலாளா் செந்தில், மாவட்ட பொருளாளா் சிவகுமாா், மாவட்ட இணைச் செயலாளா் அமா்நாத், துணைத் தலைவா் மோகன் உள்ளிட்ட ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் 917 போ் இந்த போராட்டத்தில் பங்கேற்றனா்.

மன்னாா்குடி: மன்னாா்குடி, கோட்டூா் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள், வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை என 2 நாள்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் வியாழக்கிழமை அலுவலகத்துக்கு வரவில்லை. இதனால், பல்வேறு பணிகளுக்காக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.

X
Dinamani
www.dinamani.com