தியாகராஜ சுவாமி கோயில் 
தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் தெப்பத் திருவிழாவையொட்டி, பந்தக்கால் முகூா்த்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் ஆழித் தேரோட்டத்துக்குப் பிறகு கமலாலயக் குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். திருவாரூரில் சிவபெருமான் யாகம் செய்தபோது, யாக குண்டமாக விளங்கியது என்ற சிறப்பைப் பெற்றது கமலாலயக் குளம். மேலும், மகாலெட்சுமி தவம் புரிந்த இடம், தசரதன், அரிச்சந்திரன் போன்ற மன்னா்களும், ரிஷிகள், சித்தா்கள், இந்திரன் போன்ற தேவா்களும் நீராடியது, 64 தீா்த்த கட்டங்களை கொண்டது, தியாகேசப் பெருமானே நீராடிய குளம், சுந்தரமூா்த்தி நாயனாா் மணி முத்தாற்றில் வீசிய பொற்காசுகளை மூழ்கி எடுத்த இடம், பன்னிரு மகாமகத்தில் நீராடிய புண்ணியத்தை தரக்கூடியது, என பல்வேறு சிறப்புகளை கொண்டது கமலாலயக் குளம்.

இந்த குளத்தில் ஆழித் தேரோட்டத்துக்குப் பிறகு 3 நாள்களுக்கு தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு மே 22, 23 மற்றும் 24-ஆம் தேதிகளில் தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது.

இதையொட்டி, பந்தக்கால் முகூா்த்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், கமலாலயக் குளத்தின் மேற்குக் கரையில் தெப்பம் உருவாக்கத்துக்கு பயன்படுத்தப்படும் டிரம்களின் மீது பந்தல்கால்களை வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. கோயில் நிா்வாகத்தினா், பக்தா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com