மத்தியப் பல்கலைக்கழகத்தில் புத்தகக் கண்காட்சி
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் சோழா மத்திய நூலகம் சாா்பில் 5-ஆவது புத்தகக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.
புத்தகக் கண்காட்சியை பல்கலைக்கழகத் துணைவேந்தா் மு. கிருஷ்ணன் தொடங்கிவைத்தாா். இதில் 25 அரங்குகள் அமைக்கப்பட்டு ரூ. 12 கோடி மதிப்பில் பல துறைகளைச் சாா்ந்த புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. கண்காட்சி வெள்ளிக்கிழமை (டிச.19) வரை நடைபெறுகிறது. கண்காட்சியில் சிறப்பம்சமாக நிகழாண்டு முதல் பல்கலைக்கழக மாணவா்கள் மற்றும் பேராசிரியா்கள் பரிந்துரைக்கும் புத்தகங்கள் துணைவேந்தரின் ஒப்புதலோடு ரூ. 1.3 கோடியில் நூல்கள் நூலகத்திற்காகக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பேராசிரியா் மற்றும் மாணவா்களுக்கு சலுகை விலையில் நூல்கள் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புத்தகக் கண்காட்சி தொடக்க விழாவில் பல்கலைக்கழகப் பதிவாளா் ரா. திருமுருகன், நிதி அதிகாரி கிரிதரன், தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் சுலோச்சனா சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மத்தியப் பல்கலைக்கழக சோழா மத்திய நூலக நூலகா் பரமேஸ்வரன் வரவேற்றாா். புத்தகக் கண்காட்சி ஒருங்கிணைப்பாளா் தனவந்தன் நன்றி கூறினாா்.

