வாகன விபத்தில் பலியான சிறப்பு உதவி ஆய்வாளா் குடும்பத்திற்கு ரூ. 1கோடி காப்பீட்டுத் தொகை
திருவாரூா் மாவட்டத்தில், வாகன விபத்தில் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளா் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி காப்பீட்டுத் தொகை புதன்கிழமை வழங்கப்பட்டது.
முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவா் மோகன் (50). இவா், ஜூலை 15 ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் பணிக்காக விளமலிலிருந்து, ஆயுதப்படை மைதானத்துக்குச் சென்று கொண்டிருந்தாா். அப்போது, குறுக்கே வந்த நாயால், கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னா் சிகிச்சை பலனின்றி ஜூலை 16 ஆம் தேதி உயிரிழந்தாா்.
இவா், தனது மாதாந்திர ஊதியத்தை ஸ்டேட் வங்கி மூலம் பெற்று வந்துள்ளாா். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் மாதாந்திர ஊதியத்தை பெறும் அரசு ஊழியா்கள், பணிக்காலத்தில் விபத்து போன்ற நிகழ்வுகளில் ஏற்படும் இறப்பு மற்றும் காயங்களின் தன்மைக்கேற்ற ரூ. 1 கோடி வரை காப்பீடு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதனடிப்படையில், உயிரிழந்த மோகனுக்கு விபத்துக் காப்பீடு அடிப்படையில் ரூ. 1 கோடிக்கான காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இத்தொகையை, மோகனின் குடும்பத்தினரை மாவட்ட காவல் அலுவலகத்துக்கு நேரில் அழைத்து, எஸ்பி கருண்கரட், வழங்கினாா்.
நிகழ்வில், திருவாரூா் ஸ்டேட் வங்கி கிளை முதன்மை மேலாளா் சுரேஷ்பாபுதாசரி, மாவட்ட தனிப் பிரிவு காவல் ஆய்வாளா் ராஜா ஆகியோா் உடனிருந்தனா்.

