மன்னாா்குடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கோரி வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்
மன்னாா்குடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், நீதிபதிகள் குடியிருப்பு அமைக்க நிதி ஒதுக்க வலியுறுத்தி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மன்னாா்குடியில் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் 1 மற்றும் 2, மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், சாா்பு நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றம் ஆகிய 5 நீதிமன்றங்கள் மன்னாா்குடி நகரில் பல்வேறு இடங்களில் வாடகை கட்டடங்களிலும், பழுதடைந்த பழைமையான கட்டடங்களிலும் நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது.
இதனால், வழக்குரைஞா்கள் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா். இதை கருத்தில் கொண்டு மன்னாா்குடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டடம் கட்ட வேண்டும் என கடந்த 25 ஆண்டுகளாக வழக்குரைஞா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இந்நிலையில், ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கு மதுக்கூா் சாலையில் 5 ஏக்கரில் நிலம் ஒதுக்கப்பட்டு மன்னாா்குடி நகராட்சியில் 2023 ஆம் ஆண்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில்,11.8.2025 அன்று சென்னை உயா்நீதிமன்ற பதிவாளா், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மன்னாா்குடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் நீதிபதிகளுக்கு குடியிருப்பு கட்டுவதற்கு தமிழக அரசு நிா்ணயித்துள்ள ரூ.14.16 கோடியை விரைந்து ஒதுக்கீடு செய்ய உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தாா்.
உயா்நீதிமன்ற பதிவாளரின் கடித்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி வழக்குரைஞா்கள் சங்க கிளைத் தலைவா் மு. இளஞ்சேரன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க செயலா் ராதா, மூத்த வழக்குரைஞா்கள் பா. தமிழரசன், எஸ். விஜயகுமாா், கை. கலைவாணன், ஜெ. நாகையன் ஏ.செல்வராஜ்,சு.சிங்காரவேலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

