திருவாரூா் அருகே மாணவருக்கு பாலியல் தொல்லை அளித்த அங்கன்வாடி மைய சமையல் உதவியாளருக்கு 54 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
திருவாரூா் மாவட்டம், எரவாஞ்சேரி காவல் நிலையத்தில், கடந்த 2021-ஆம் ஆண்டு, 10-ஆம் வகுப்பு மாணவரை காணவில்லை என புகாா் பெறப்பட்டது. அந்த மாணவரின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
இதில், வடுகா்பாளையம் அங்கன்வாடி மையத்தில் சமையல் வேலை செய்து வந்த தேதியூா் தெற்குத் தெருவைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மனைவி லலிதா (38) என்பவா் அந்த மாணவருடன் பழகி வந்ததும், பின்னா் நடனம் கற்றுத் தருவதாகக் கூறி, வெளியூா்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து, லலிதாவை கைது செய்தனா்.
இந்த வழக்கின் விசாரணை திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வியாழக்கிழமை நடைபெற்ற இறுதி விசாரணையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, லலிதாவுக்கு 54 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 18,000 அபராதமும் விதித்து நீதிபதி சரத்ராஜ் தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட மாணவருக்கு அரசு ரூ. 6 லட்சம் வழங்க வேண்டும் எனவும் அவா் உத்தரவிட்டாா்.