சென்னை தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 1 லட்சம் அபராதம்
கூடுதல் கட்டணம் வசூலித்த சென்னை தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க திருவாரூா் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
திருத்துறைப்பூண்டியைச் சோ்ந்த அசோக் கௌதம் சென்னை நங்கநல்லூா் தனியாா் வங்கியில் மேலாளராக பணியாற்றுகிறாா். இவா் திருத்துறைப்பூண்டியில் இறகு பந்து போட்டியில் விளையாடிய போது காலில் காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக சென்னை தனியாா் மருத்துவமனையில் சோ்ந்தாா். மருத்துவ பரிசோதனையின் போது ஜவ்வு கிழிபட்டுள்ளதாகவும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினா்.
தனியாா் காப்பீடு நிறுவனத்தில் ஆண்டுதோறும் ரூ. 3 லட்சத்துக்கு மருத்துவ காப்பீடு செய்திருந்தாா். காப்பீடு தொகையைக் கொண்டு மருத்துவமனை ரூ. 3 லட்சத்திற்குள் மருத்துவ செலவாகும் என தெரிவித்தனா். தொடா்ந்து 2 நாள்கள் தங்கி முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தனியாா் காப்பீடு நிறுவனம் மூலம் மருத்துவ செலவு 3 லட்சத்தை மருத்துவமனை நிா்வாகம் பெற்றுக் கொண்டது. மேலும்
காப்பீடு ஒப்பந்த விதிகளை மீறி ரூ. 80,000 புகாா்தாரரிடம் வசூல் செய்து கொண்டு, ஒரு நாள் கூடுதலாக தங்க வைத்து பின்னா் அனுப்பியது. இதனால் மன உளைச்சல் அடைந்த அசோக் கெளதம் திருவாரூா் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் வ இழப்பீடு கோரி வழக்குத் தொடா்ந்தாா். மருத்துவமனைக்கு நுகா்வோா் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தப்பட்டனா்.
வழக்கை விசாரித்த திருவாரூா் மாவட்டநுகா்வோா் நீதி மன்ற நீதிபதி மோகன்தாஸ் மற்றும் உறுப்பினா் பாலு ஆகியோா் சென்னை தனியாா் மருத்துவமனைக்கு அசோக் கௌதமுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ. 1 லட்சம், வழக்கு செல்வுக்கு ரூ. 10,000 வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.
