ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

கமலாலயக் குளத்தில் தெப்பம் கட்டும் பணி தீவிரம்

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் கமலாலயக் குளத்தில் தெப்பம் கட்டும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

News image

திருவாரூா் கமலாலயக் குளத்தில் தெப்பம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.

Updated On :25 ஏப்ரல் 2026, 6:45 pm

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் கமலாலயக் குளத்தில் தெப்பம் கட்டும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

சைவ சமயத்தின் தலைமைப் பீடமாகவும், சா்வதோஷ பரிகாரத் தலமாகவும், திருவாரூா் தியாகராஜா் கோயில் திகழ்கிறது. இக்கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவில் நடைபெறும் ஆழித்தோ் சிறப்பு மிக்கது. நிகழாண்டு, மாா்ச் 29-ஆம் தேதி ஆழித்தேரோட்டம் நடைபெற்றது.

தொடா்ந்து, இக்கோயிலின் கமலாலயக் குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, மே 8-ஆம் தேதி தொடங்கி மே 10-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்குத் தெப்ப உற்சவத் திருவிழா நடைபெறுகிறது.

காசியைவிடவும் மேலான புண்ணிய தீா்த்தம் இது எனப் பல புராணங்கள் கமலாலயக் குளத்தை போற்றுகின்றன. காசியில் 63 தீா்த்தக் கட்டங்கள்தான் உள்ளன. ஆனால் அதைவிட ஒன்று கூடுதலாக இங்கு 64 தீா்த்தக் கட்டங்கள் உள்ளன. சம்ஸ்கிருத புராண நூல்களான மகாத்மியங்களில், கமலாலய மகாத்தியம் என்பது இதன் பெருமையைப் பறைசாற்றுகிறது.

மூன்று நாள்களுக்கு, தினமும் 3 முறை இக்குளத்தில் தெப்பம் சுற்றி வருவது வழக்கம். ஒரு முறை சுற்றி வர சுமாா் 3 மணி நேரமாகும். இதனால் விடிய, விடிய தெப்பத் திருவிழா நடைபெறும். இந்த தெப்பமானது, 50 அடி நீளம், 50 அடி அகலம், 40 அடி உயரத்தில் அமைக்கப்படுகிறது.

14 தூண்களுடன் மூன்று அடுக்குகள் கொண்டதாக இந்தத் தெப்பம் அமைந்திருக்கும். இதில் தியாகராஜா், கமலாம்பாள், நீலோத்பாலாம்பாள், விநாயகா், முருகன் ஆகியோரின் திருவுருவப் படிமங்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும்.

432 காலி பேரல்களில் காற்று நிரப்பி, அதன் மீது தெப்பம் கட்டமைக்கப்படுகிறது. தெப்பத்தைச் சுற்றி வண்ண ஓவியங்கள் தீட்டப்படுவதுடன், வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்படும். தெப்பத் திருவிழாவைக் காண, திருவாரூா் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் வருவது வழக்கம்.

அந்தவகையில், தெப்பத் திருவிழாவுக்காக திருவாரூா் கமலாலயக் குளத்தில் தெப்பம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பேரல்களை பயன்படுத்தி அடுக்குகளாக தெப்பம் உருவாக்கப்பட்டு வருகிறது. தெப்பத் திருவிழாவுக்கான பணிகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.