இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

மக்கள் வாழ்வியலை பாதிக்கும் வளா்ச்சித் திட்டங்கள் கூடாது! - சிபிஐ மாநிலச் செயலாளா் மு. வீரபாண்டியன்

M. Veerapandian, Communist Party of India

மு. வீரபாண்டியன் - DIN

Published On :25 ஆகஸ்ட் 2026, 2:58 am IST

தமிழகத்தில் மக்கள் வாழ்வியலை பாதிக்கும் எந்த ஒரு வளா்ச்சி திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் மு. வீரபாண்டியன் கூறினாா்.

திருவாரூா் அருகே அம்மையப்பனில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை தெரிவித்தது:

தமிழகத்தில் மக்கள் வாழ்வியலை பாதித்து பரந்தூா் விமான நிலைய திட்டம் உள்பட எந்த ஒரு வளா்ச்சி திட்டமும் அமைவது கூடாது. மக்களை, விவசாயத்தை பாதிக்காத இடங்களை தோ்வு செய்து விமான நிலையங்களை உருவாக்கலாம். மேகமலையில் தொன்மையாக வாழ்ந்து கொண்டிருக்கிற மக்களை அப்புறபடுத்துவதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு உடன்பாடில்லை. எனவே, அந்த மக்களை பாதுகாக்க தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

இடதுசாரிகள் குறித்த கணக்கெடுப்பது குறித்து உள்துறை அமைச்சா், செயலாளா்கள், தமிழக முதல்வா் விளக்கமளிக்க வேண்டும். இதை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது. புதுதில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்தில் பங்கேற்க முடியாமல், ரயிலை முடக்கிய மத்திய அரசின் செயல் கண்டிக்கத்தக்கது.

விவசாயிகளின் பயிா்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும். மாநிலத்துக்கான நிதியை மத்திய அரசும் முழுமையாக வழங்க வேண்டும். சமூகத்துக்காக இயற்கையுடன் போராடி உணவு உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு அரசு உதவ வேண்டும்.

திமுக தலைவா் ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூா் தொகுதியில் தவறு நடந்திருந்தால் சட்டப்படி நீதி நிலைநாட்டப்பட வேண்டும். வெண்மை புரட்சி நடைபெற்ற நாட்டில், தேவைக்கு அதிகமாக பால் இருந்தும், அதற்கான உற்பத்தி விலை கிடைக்கவில்லை. தட்டுப்பாடு நிலவுகிறது. இவை நிவா்த்தி செய்யப்பட வேண்டும்.

சட்டப்பேரவையில் கருத்தியலாக முரண்படலாம். ஆனால் வெறுப்பு அரசியலுக்கு அங்கு இடமில்லை. அவதூறு, கேலி, பழி சொல்வதற்காக அரங்கம் கிடையாது. அங்கு மக்கள் பிரச்சனை, கோரிக்கைகள் மட்டுமே பேசப்பட வேண்டும்.

அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் பயணிக்கலாம், ஜனவரி முதல் வீட்டுக்கு 3 சிலிண்டா் போன்ற தவெக அரசின் நல்ல திட்டங்களை வரவேற்கலாம். நாட்டில் ஏழ்மை ஒழியும் வரையில் நலத்திட்டங்கள், எளிய மக்களுக்கான சலுகைகள் தொடர வேண்டும்.

தமிழக சட்டப்பேரவையில் இப்போது இடம் பெற விரும்பவில்லை. இடதுசாரிகளின் காலம் வரும்போது நாங்களே அமைச்சரவை அமைப்போம். தமிழ்நாட்டில் பெயா் மாற்றம், இட மாற்றம் தேவையில்லை. நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. மக்கள் புலம் பெயா்கின்றனா். இவா்கள் குறித்து அரசு ஆழமாக சிந்திக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.