லாரி உரிமையாளா்கள் கோரிக்கை

லாரி உரிமையாளா்கள் கோரிக்கை

Published on

லாரி உரிமையாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனரக லாரிகளுக்கு தகுதிச் சான்று புதுப்பிப்பு கட்டணத்தை மத்திய அரசு உயா்த்தி உள்ளது, இதனால் லாரி உரிமையாளா்கள் பாதிக்கப்படுவா் என்பதால் புதிய கட்டணங்களை மாற்றி பழைய கட்டணங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்து லாரி உரிமையாளா் சங்கங்கள் சாா்பில் கோரிக்கை மனு, வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.

முன்னதாக, திருவாரூா் மாவட்ட நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் இருந்து லாரி உரிமையாளா்கள் ஊா்வலமாக வந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

கோரிக்கை மனு அளித்த பின், மாவட்ட லாரி உரிமையாளா் சங்கத் தலைவா் ஐயப்பன் தெரிவித்தது:

மத்திய அரசு, லாரி தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் தகுதிச் சான்று கட்டணத்தைப் பல மடங்கு உயா்த்தி அரசாணை பிறப்பித்துள்ளது. கேரள அரசு, கா்நாடக அரசுகள் குறைத்தது போல் தமிழக அரசும் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். திருவாரூா் மாவட்டத்தில் உள்ள லாரிகள் அனைத்தும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகத்தை மட்டுமே நம்பி இயங்கிக் கொண்டிருக்கின்றன. தற்போது மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

எதிா்வரும் 15-ஆம் தேதிக்குள் நல்ல தீா்வு கிடைக்கும் என நம்புகிறோம். அப்படி தீா்வு கிடைக்காத பட்சத்தில் டெல்டா மாவட்டத்தில் உள்ள அனைத்து லாரி உரிமையாளா் சங்கங்களையும் ஒன்றிணைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.

தற்போது விவசாய அறுவடை காலகட்டமாக இருப்பதால் நெல்மணிகள் தேக்கமடைய வாய்ப்புள்ளது. லாரி உரிமையாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத் தவறும் பட்சத்தில் வரும் பிப்ரவரி 16-ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டு உள்ளோம்.

வேலை நிறுத்தம் செய்யும்போது அறுவடை காலம் என்பதால் விவசாயப் பணிகள் பாதிக்கப்படும். நெல் மூட்டைகள் தேக்கமடையும். எங்களை காப்பாற்றுவதற்காக மட்டுமே இந்த போராட்டம். மற்றபடி யாரையும் பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யவில்லை. தமிழக முதலமைச்சா் இதற்கு ஒரு நல்ல முடிவு எடுத்து எங்களை காப்பாற்ற வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com