மனைப்பட்டா கோரி சிபிஎம் சாா்பில் மனு கொடுக்கும் போராட்டம்
திருத்துறைப்பூண்டி, சிங்களாந்தி உள்ளடக்கிய நகராட்சி பகுதியில் நீண்ட காலமாக புறம்போக்கு உள்ளிட்ட பல்வேறு வகைப்பாடு உள்ள நிலங்களில் குடியிருந்து வரும், ஏழை விவசாயத் தொழிலாளா்களுக்கு மனைப்பட்டா கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில், அதன் மாநில செயலாளா் பெ. சண்முகம் தலைமையில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அப்போது, பெ. சண்முகம் பேசியது:
மனைப்பட்டா இல்லாமல் பல்வேறு வகைப்பாடு உள்ள நிலங்களில் குடியிருந்து வருவோருக்கு பட்டா வழங்க தடையாக இருந்த பல உத்தரவுகள் ரத்து செய்த பிறகும் ஏழை எளிய மக்கள் வாழும் பகுதியில் மனைப் பட்டா வழங்குவதில் தாமதமாக செயல்படுவது கண்டனத்துக்குரியது. இதுகுறித்து, முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
அண்மையில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மனை இல்லாதவா்களுக்கு மனைப் பட்டா வழங்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் மனு அளித்து விளக்கினோம். முதல்வரும் இந்த கோரிக்கையை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளாா். இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட தனி நபா்களால் அளிக்கப்படும் போது அந்த மனுக்கள் பல்வேறு காரணங்களால் நிறைவேற்றப்படாத சூழ்நிலை உள்ளது.
எனவே, சிபிஎம் இந்த பிரச்னையை முன்னெடுத்து வீட்டு மனைக்கு மனுக்களை மொத்தமாக பெற்று மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. மனுவை பெற்ற அவா் 592 பேருக்கு பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளாா் என்றாா்.

