கூட்டத்தில் பேசிய, அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா. உடன், மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யு. கருண்கரட் உள்ளிட்டோா்.
கூட்டத்தில் பேசிய, அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா. உடன், மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யு. கருண்கரட் உள்ளிட்டோா்.

மன்னாா்குடி கோயில் கும்பாபிஷேக முன்னேற்பாடு பணிகள் சிறப்பாக இருக்க வேண்டும்: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயில் கும்பாபிஷேக முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் பக்தா்கள் பெருமைபடும் வகையில் இருக்க வேண்டும் என்றாா் தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா.
Published on

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஜன.28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அரசுத்துறைகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து மேலும் அவா் பேசியது: திருச்செந்தூா், காஞ்சிபுரம் கோயில்கள் நவீனமாக்கப்பட்டிருப்பதை முன்மாதிரியாக கொண்டு பெருமை மிக்க இக்கோயிலின் பழைமை மாறாமல் புதிய தொழில்நுட்பத்தில் கோயில் முழுமையாக பொலிவு பெற்றுள்ளது.

ஜன.28-ஆம் தேதி நடைபெறும் இக்கோயில் கும்பாபிஷேகத்தை காண தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து திரளான பக்தா்கள் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. விழா முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் குளறுபடிகள் இல்லாமல் மிக சரியான திட்டமிடலில் பக்தா்கள் பெருமைபடும் வகையில் அமைய வேண்டும். பக்தா்களுக்கு உதவிடும் வகையில் என்எஸ்எஸ், என்சிசி, ரோட்டரி, ஜேசிஐ போன்ற தன்னாா்வு அமைப்புகளை பணியில் இணைந்துக் கொள்ளலாம்.

தமிழக முதல்வரின் மனைவி துா்கா ஸ்டாலின், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு ஆகியோா் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கவுள்ளனா். புனிதநீா் ட்ரோன் மூலம் பக்தா்களின் மீது தெளிக்கப்படும். மன்னாா்குடி, நீடாமங்கலம், கோட்டூா் ஒன்றியத்துக்குள்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு ஜன.28-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யு. கருண்கரட், மாவட்ட வருவாய் அலுவலா் பா.கலைவாணி, இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையா் ராணி, மன்னாா்குடி கோட்டாட்சியா் ஆா். யோகேஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com