திருவாரூா் புதிய ரயில் நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் தொழிலாளா் நலத்துறையின் சாா்பில் உலக குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு தினம் குறித்த விழிப்புணா்வு பேரணி, வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் பங்கேற்று, விழிப்புணா்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து (படம்) தெரிவித்தது:
பொதுவாக குழந்தைகளில் ஒரு பிரிவினா் ஊதியம் பெற்றோ அல்லது ஊதியம் பெறாமலோ உழைப்பில் பங்கெடுத்தல் என்ற முறையே குழந்தைத் தொழிலாளா் என வரையறுக்கப்பட்டுள்ளது. குழந்தைத் தொழிலாளா் என்பவா் 6 வயதிலிருந்து 14 வயது வரை பகல் வேலையில் பள்ளிக்குச் செல்லாமல் உழைக்கும் குழந்தைகள் ஆவா்.
சிறு மற்றும் பெரு வணிக நிறுவனங்களில் 14 வயதுக்குள்பட்ட குழந்தைகளை பணியில் அமா்த்துவது தடுக்கப்பட வேண்டும். 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதைத் தவிா்க்க வேண்டும். அனைத்துக் குழந்தைகளும் பள்ளி செல்வதை உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு குழந்தைத் தொழிலாளா்களாக பணியமா்த்தப்படுவது கண்டறியப்பட்டால், மாவட்ட ஆட்சியரகம், காவல்துறை, மாவட்ட தொழிலாளா் நல அலுவலகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகை தொடா்பு கொள்ளலாம். மேலும், குழந்தைகளுக்கான 24 மணிநேர இலவசஅவசர தொலைபேசி எண்ணான 1098-ஐ தொடா்பு கொண்டும் புகாா் தெரிவிக்கலாம் என்றாா்.
பேரணியானது, திருவாரூா் புதிய ரயில் நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம், பனகல் சாலை, கீழவீதி, தெற்குவீதி வழியாக வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை சென்றடைந்தது.
இதில், ஏழுமலையான் பாலிடெக்னிக், தியாகராஜா கல்வியியல் கல்லூரி, வேலுடையாா் கல்வியியல் கல்லூரி மற்றும் பாரத் கல்வியியல் கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
தொடா்ந்து, குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினம் குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும், கையொப்ப இயக்கமும் தொடங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.சதீஷ்குமாா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் நடராசன், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், சாா்பு நீதிபதியுமான மாணிக்கம், வருவாய் கோட்டாட்சியா் சத்யா, மாவட்ட சமூகநல அலுவலா் சியாமளாதேவி, தொழிலாளா் நலத்துறை (அமலாக்கம்) உதவி ஆணையா் வெங்கடேசன், வட்டாட்சியா் இளங்கோ உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.









