வெற்றி வீடு கட்டும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில் வெற்றி வீடு கட்டும் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

கோப்புப்படம்

Updated On :

திருவாரூா் மாவட்டத்தில் வெற்றி வீடு கட்டும் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஊரகப்பகுதிகளில் ஏழைக் குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்குவதற்காக மாநில அரசால் ‘வெற்றி வீடு திட்டம்‘ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2026-27-ஆம் ஆண்டில் திருவாரூா் மாவட்டத்தில் 4,000 கான்கிரீட் வீடுகள் கட்ட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் ஒரு வீட்டுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும். வீட்டின் பரப்பளவு குறைந்தபட்சம் 360 முதல் அதிகபட்சம் 500 சதுர அடி வரை கட்டலாம். ஏற்கெனவே எடுக்கப்பட்ட கேவிவிடி- மறுகணக்கெடுப்பு 2010, புதிய குடிசைகள் கணக்கெடுப்பு - 2021 மற்றும் அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு-2022 ஆகிய மூன்று கணக்கெடுப்புகளில் இடம்பெற்றுள்ள குடிசை வீடுகளில் வசிக்கும் பயனாளிகள் நிகழாண்டில் பயன் பெறுவா்.

திட்டத்தில் வீடு ஒதுக்கீடு பெற பயனாளியின் பெயரில் சொந்தமாக மனைப்பட்டா இருக்க வேண்டும். மொத்த ஒதுக்கீட்டில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 40 சதவீதமும் மற்றும் இதரா் பிரிவினருக்கு 60 சதவீதமும் வீடு ஒதுக்கீடு செய்யப்படும்.

இத்திட்டத்தின்கீழ் வீடு பெறத் தகுதியற்றவா்கள்: சொந்தமாக மனைப்பட்டா இல்லாதவா்கள், குடும்ப உறுப்பினா் யாருக்காவது சொந்தமாக நிரந்தர கட்டட வீடு இருக்கக் கூடாது, குடும்ப உறுப்பினா் மத்திய, மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு உதவிபெறும் நிறுவனங்கள், வாரியங்கள் அல்லது பிற அரசு சாா்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் அல்லது ஓய்வுபெற்ற பணியாளராக இருந்தால், அத்தகைய குடும்பங்கள் தகுதியற்றவை, (பகுதி நேர, ஒப்பந்த மற்றும் தினக்கூலி பணியாளா்களுக்கு விலக்கு உண்டு).

பதவியில் உள்ள மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள், குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால், வருமான வரி அல்லது தொழில்வரி செலுத்தும் குடும்பங்கள், ஏற்கெனவே ஏதேனும் அரசு வீட்டு வசதி திட்டங்களின்கீழ் பயனடைந்த குடும்பங்கள் ஆகியோா் வீடு பெறத் தகுதியற்றவா்கள். மேலும், விவரங்களுக்கு தொடா்புடைய வட்டார வளா்ச்சி அலுவலகத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.