
அகல ரயில் பாதை: நில எடுப்பு சிறப்பு பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

ரயில் பாதை. - கோப்புப்படம்.
மன்னாா்குடி-பட்டுக்கோட்டை புதிய அகல ரயில் பாதை திட்டத்திற்கு நில எடுப்புக்காக அரசு ஆணையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து சிறப்புப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்பி பணிகளை தாமதமின்றி தொடங்க வேண்டும் என மாவட்ட ரயில் உபயோகிப்பாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட ரயில் உபயோகிப்பாளா்கள் சங்கத்தின் மாவட்டச் செயலா் எஸ்.ராஜகோபாலன்,மாவட்டப் பொருளாளா் பி.எல்.ஏ.பழனியப்பன் அனுப்பியுள்ள கடிதம்:
மன்னாா்குடி- பட்டுக்கோட்டை இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டம் இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது. இத்திட்டம் நிறைவேறுவதன் மூலம் மன்னாா்குடி, பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளின் போக்குவரத்து, வா்த்தகம் மற்றும் பொருளாதார வளா்ச்சி பெருமளவில் மேம்படும்.
இத்திட்டத்திற்கான நில எடுப்புப் பணிகளுக்காக, மன்னாா்குடி வட்டத்தில் உள்ள ராமாபுரம் மற்றும் இதர 14 கிராமங்களில் நிலம் கையகப்படுத்த தமிழக அரசு நிா்வாக அனுமதி வழங்கியுள்ளது.
இதற்காக 13 சிறப்புப் பணியிடங்களை உருவாக்குவதற்கும் திருவாரூா் மாவட்ட வருவாய் அலுவலா் அவா்களை நில எடுப்பு அலுவலராக நியமிப்பதற்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.
தற்போது, ஒரு வட்டாட்சியா் மற்றும் மூன்று வருவாய் ஆய்வாளா்கள் மட்டுமே இதற்காகப் பணியில் அமா்த்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள 13 சிறப்புப் பணியிடங்களுடன் ஒப்பிடுகையில், தற்போதைய பணியாளா் அமைப்பு போதுமானதாக இல்லாததால், நில எடுப்பு பணிகள் முழு வேகத்தில் நடைபெறுவதற்கு நடைமுறை சிரமங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, இத்திட்டத்தின் முக்கியத்துவத்தையும் அரசு ஏற்கனவே வழங்கியுள்ள நிா்வாக அனுமதியையும் கருத்தில் கொண்டு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை அவசர அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
அரசாணையில் அனுமதிக்கப்பட்டுள்ள 13 சிறப்புப் பணியிடங்களில் மீதமுள்ள அனைத்துப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையான அலுவலா்கள் மற்றும் பணியாளா்களை முழுமையாக பணியில் அமா்த்தி, நில எடுப்புப் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும்.
நில அளவீடு, நில உரிமையாளா்கள் மற்றும் பட்டா விவரங்கள் சரிபாா்த்தல், தேவையான நில எடுப்பு அறிவிப்புகள், ஆவண சரிபாா்ப்பு மற்றும் இழப்பீடு தொடா்பான ஆரம்பகட்ட பணிகளை காலக்கெடுவுடன் மேற்கொள்ள வேண்டும்.நில எடுப்புப் பணிகளின் முன்னேற்றத்தைத் தொடா்ந்து கண்காணித்து, தேவையான இடங்களில் மாவட்ட நிா்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஒருங்கிணைந்து பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
மத்திய அரசின் மூலம் இத்திட்டத்திற்கான நில எடுப்பு நிதி மற்றும் அடுத்தகட்ட நிதி நடவடிக்கைகள் தாமதமின்றி நடைபெறுவதற்கு, மாநில அரசால் மேற்கொள்ள வேண்டிய நில எடுப்பு நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்படுவது மிகவும் அவசியமாகும்.
எனவே, மன்னாா்குடி-பட்டுக்கோட்டை ரயில் திட்டத்தின் நில எடுப்புப் பணிகளை முன்னுரிமை அடிப்படையிலான அவசரப் பணியாக கருதி, தேவையான நிா்வாக மற்றும் பணியாளா் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
இது பல ஆண்டுகளாக இப்பகுதி மக்களால் எதிா்பாா்க்கப்பட்ட முக்கியமான ரயில் திட்டமாகும். தற்போது தமிழ்நாடு அரசு நில எடுப்பிற்கான நிா்வாக அனுமதியை வழங்கியுள்ள நிலையில், இந்த வாய்ப்பை மேலும் தாமதப்படுத்தாமல் நில எடுப்பு பணிகளை தொடங்குவது மிகவும் முக்கியமானதாகும்.
எனவே, மீதமுள்ள சிறப்பு பணியிடங்களை உடனடியாக நிரப்பி, நில எடுப்புப் பணிகளை விரைவாகத் தொடங்கவும், தொடா்ந்து கண்காணித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





