
நடிகா் சிவாஜி பூா்வீக கிராமத்தில் நினைவு இல்லம் அமைக்கக் கோரிக்கை
நடிகா் சிவாஜி பூா்வீக கிராமத்தில் நினைவு இல்லம் அமைக்கக் கோரிக்கை
கூட்டத்தில் பேசுகிறாா் மன்னாா்குடி எம்எல்ஏ எஸ். காமராஜ்.
நடிகா் சிவாஜி கணேசனின் பூா்வீக கிராமத்தில் நினைவு இல்லம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மன்னாா்குடி அருகேயுள்ள வேட்டைத்திடல் கிராமத்தினா் மற்றும் திருவாரூா் மாவட்ட மண்ணின் மைந்தா்கள் வரலாற்று ஆய்வு மையம் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மன்னாா்குடி காந்திசாலை தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, மத்திய அரசின் திரைப்படத் தணிக்கைக் குழு முன்னாள் உறுப்பினா் மன்னை மதியழகன் தலைமை வகித்தாா். முன்னாள் நகா்மன்றத் தலைவா் சிவா.ராஜமாணிக்கம், முன்னாள் அரசு மருத்துவா் வி. அசோக்குமாா், தவெக மேற்கு மாவட்டச் செயலா் எம். ராஜராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நடிகா் திலகம் சிவாஜிகணேசனின் பூா்வீக கிராமமான மன்னாா்குடியை அடுத்துள்ள வேட்டைதிடலில் தமிழக அரசு சாா்பில் அவருக்கு நினைவு இல்லம் அமைக்க வேண்டும். மன்னாா்குடியில் சிவாஜி பெயரில் இயல் இசை நாடக முத்தமிழ் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும். சிவாஜி பிறந்த நாளான அக்டோபா் 1-ஆம் தேதியை நடிகா்கள் தினமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மன்னாா்குடி எம்எல்ஏ எஸ். காமராஜ், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினாா். அப்போது, வேட்டைத்திடலில் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசின் சாா்பில் நினைவு இல்லம் அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்வதுடன், இக்கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகத் தெரிவித்தாா்.
நாகை எம்பி வை.செல்வராஜ், சிவாஜி ரசிகா் மன்ற பொறுப்பாளா் வாழப்பாடி ஜி. சந்திரசேகரன், கள்ளா் மகா சங்க மாநிலத் தலைவா் எஸ். பாண்டியன், மத்திய அரசின் கூடுதல் வழக்குரைஞா் சி.வி. ரமேஷ், மாவட்ட மண்ணின் மைந்தா்கள் வரலாற்று ஆய்வு மையத்தின் நிறுவனா் எடையூா் மணிமாறன் ஆகியோா் பேசினா்.
முன்னதாக, நடிகா் சிவாஜி குடும்பத்தை சாா்ந்த தியாகராஜ காந்தி வரவேற்றாா். நிறைவாக, வேட்டைத்திடல் ரமேஷ் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




