நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மனத்தைக் கவரும் பாறை ஓவியக் கண்காட்சி!

மனித மனங்களில் மறைந்துள்ள நுண்ணிய உணர்வுகளைத் கிளர்ந்தெழச் செய்யும் வல்லமை ஓவியங்களுக்கு உண்டு என்றால் அது நிதர்சனம். கண்டவுடன் மனத்தில் பரவசமும், உணர்ச்சிப் பிரவாகமும் ஏற்படுத்தக்கூடிய கலைமிகு ஓவியங்

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:01 pm

வே.சுந்தரேஸ்வரன்

மனித மனங்களில் மறைந்துள்ள நுண்ணிய உணர்வுகளைத் கிளர்ந்தெழச் செய்யும் வல்லமை ஓவியங்களுக்கு உண்டு என்றால் அது நிதர்சனம். கண்டவுடன் மனத்தில் பரவசமும், உணர்ச்சிப் பிரவாகமும் ஏற்படுத்தக்கூடிய கலைமிகு ஓவியங்கள் காலத்தால் என்றும் அழியாத அரிய படைப்புகளாகப் போற்றப்படுகின்றன!

இன்றைக்கு சுவர் ஓவியங்கள், மணல் சிற்ப ஓவியங்கள், மர ஓவியங்கள், துணி ஓவியங்கள், கண்ணாடி ஓவியங்கள் என பல்வேறு வகையான ஓவியங்கள் இருந்தாலும், பழங்கால ஓவியங்களுக்கான மவுசு என்னவோ குறைவதில்லை.

புத்த மதத்தை அடிப்படையாகக் கொண்ட ஏராளமான குகை ஓவியங்கள், சுவரோவியங்கள் இந்தியாவிலும் பிறநாடுகளிலும் காணப்படுகின்றன. புத்த மரபுசார் ஓவியங்கள் காலத்தால் அழியாதவை. அதேபோன்று பழமையான பாறை, சுவர் ஓவியங்களையும் காண முடியும்.

கலாசார உறவுக்கான இந்தியக் கவுன்சில் (ஐ.சி.சி.ஆர்.) சார்பில் இந்தப் பாறை, சுவர் ஓவியங்களின் கண்காட்சி புது தில்லியில் நடைபெற்றது.

டிசம்பர் 3 தொடங்கி டிசம்பர் 7-ம் தேதி வரை இந்தரப் பிரஸ்தா எஸ்டேட் பகுதியில் உள்ள ஐ.சி.சி.ஆர். ஆசாத் வளாக அரங்கில் இக்கண்காட்சி நடைபெற்றது. காட்சிகள் பெரும்பாலும் இலங்கையில் உள்ள சிற்ப ஓவியங்கள் காணப்பட்டன.

இலங்கையில் உள்ள புத்த ஓவியங்கள் கிளாசிகல், கண்டியன் ஆகிய இரு காலத்தைச் சேர்ந்தவையாகும். அதே போன்று, இங்குள்ள சுவரோவியங்களின் பாரம்பரியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி இன்று வரை தொடர்வதாகவும், இந்நாட்டின் ஓவியம், சிற்பக் கலை கி.மு. 2 அல்லது கி.மு. 3-ம் நூற்றாண்டில் தொடங்குவதாகவும் கூறப்படுகிறது.

இந்நாட்டில் உள்ள புத்த ஸ்தூபிகள், பழமையான கட்டடங்கள் அவற்றின் பெருமையைப் பறைசாற்றுகின்றன. பழைமைக்குரிய நகரமான அனுராதாபுரத்தில் உள்ள பழைமை வாய்ந்த கட்டங்களில் சிற்பங்களும், வேலைப்பாடுகளும் ஏராளமாக காணப்படுகின்றன. மேலும், இலங்கையில் கண்டியில் சுவர் ஓவியங்கள் மிகுதியாக காணப்படுகின்றன.

கீழ் நாட்டுப்புற ஓவிய மரபில் வரைந்த சுவரோவியங்கள், கண்டி மன்னர் கால ஓவியங்கள், தம்பல விஹாரங்கள், பூர்வராம விஹார ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அங்குள்ள பாறை, குகை ஓவியங்கள் பலவும் மரப்பலகை, துணிகள் ஆகியவற்றில்  வண்ணக் கலவை கொண்டு வடித்தெடுக்கப்பட்டிருந்தன.

18-ம் நூற்றாண்டுகால குகை ஓவியங்களும் தம்பல அருகே உள்ள கல்கிரியகாம குகைக் கோயிலில் உள்ள கண்டி அரசர் காலத்தைச் சேர்ந்த குகை ஓவியங்களும் மனத்தைக் கவரும் வகையில் அழகுற வரையப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

வில்லில் அம்பு எய்தும் ஆண்மகன், யானைத் தந்தத்தைப் பரிசாக அளிக்கும் அரசன், தியானத்தில் அமர்ந்திருக்கும் புத்தர், கண்டி கோயில் கூரையில் வரையப்பட்டுள்ள நாட்டிய ஓவியம், இசைக் கருவி மீட்டும் பெண் என பல்வகை ஓவியங்கள் வண்ணங்களைக் குழைத்துக் குழைத்து அதன் பழைமை மாறாமல் வரையப்பட்டிருந்தன. இக்கண்காட்சி ஓவிய ரசிகர்களின் மனத்தைக் கொள்ளையிடுவதாக அமைந்திருந்தது.

""எனக்கு புத்தர் என்றால் மிகவும் விருப்பம். இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கும் சென்று புத்த விகாரங்கள், ஸ்தூபிகள், குகை ஓவியங்கள், சுவர் ஓவியங்களைப் பார்த்துள்ளேன்.

இந்தப் பாறை, சுவரோவியங்களைப் பார்க்கும்போது மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. ஏதோ ஓர் அமைதி இதயத்தில் பரவுவது போன்ற உணர்வு. இலங்கைக்குச் சென்று இந்த ஓவியங்களைப் பார்க்க நினைத்திருந்தேன். தற்போது இங்கே பார்ப்பதற்கு வாய்ப்புக் கிடைத்துவிட்டது. மிகவும் அற்புதமாக வரைந்துள்ளனர்'' என்று காஸியாபாதைச் சேர்ந்த கோசிராம் கூறினார்.

இந்த அழகு மிளிரும் ஓவியங்களை இலங்கையைச் சேர்ந்த ஓவியக் கலைஞர்கள் ஜெகத் ஜெயசூர்ய, திலன் சஷிக, தம்மிகா பண்டார ஆகியோர் வரைந்திருப்பதாக கண்காட்சிக் கூட ஊழியர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.