மனசுக்கு பிடித்த ஊர்
""எனது சொந்த ஊர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம். எனது தந்தை ஆர். சேதுராமன் நெல்லை மாவட்டத்தில் துணை வட்டாட்சியராகப் பணியாற்றியவர். கும்பகோணத்தில் எனது மாமா ஆர். மகாலிங்கம் வீட்டில்தான் தங்கியிருந்


""எனது சொந்த ஊர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம். எனது தந்தை ஆர். சேதுராமன் நெல்லை மாவட்டத்தில் துணை வட்டாட்சியராகப் பணியாற்றியவர். கும்பகோணத்தில் எனது மாமா ஆர். மகாலிங்கம் வீட்டில்தான் தங்கியிருந்தேன்.
அக்காலத்தில் தஞ்சை மாவட்டத்தில் இருந்த ஒரே கண் மருத்துவர் என் மாமாதான். கும்பகோணம் அரசுக் கல்லூரியில் பி.ஏ. படித்தேன். கல்லூரித் தேர்வு முடிந்து விடுமுறையில் இருந்தேன். அப்போது, "தில்லிக்கு வருகிறாயா?' என்று எங்கள் தூரத்து உறவினர் ராமசுப்பிரமணியன் என்னிடம் கேட்டார். ஊர் சுற்றிப் பார்ப்பதில் அப்போது எனக்கு மிகுந்த ஆர்வம். நானும் "சரி' என்று சொல்லிவிட்டேன்.
1955-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தில்லி வந்தேன். தற்போதைய "மந்திர் மார்க்'தான் அப்போதைய ரீடிங் ரோடு. அங்கிருந்த உறவினர் வீட்டில்தான் கொஞ்ச காலம் தங்கியிருந்தேன். தில்லியின் சூழல் மனசுக்குப் பிடித்துப் போகவே இங்கேயே வேலைசெய்வது என்று முடிவாகிப்போனது.
1956-ம் ஆண்டில் எல்.டி.சி. தேர்வு எழுதி "பர்மா ஷெல்' ஆங்கிலேய கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். பிறகு அந்த நிறுவனம் "பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்' என்றாகிவிட்டது. அதே நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வும் பெற்றுவிட்டேன்.
சாலைகள் வெறிச்சோடியிருக்கும்
நான் வேலைக்குச் சேர்ந்த காலத்தில் எனது மாதச் சம்பளமே ரூ. 180தான். அப்போதெல்லாம் மாலை 6 மணிக்கே தெருக்கள் வெறிச்சோடிக் கிடக்கும். மக்கள் நடமாட்டம் இருக்காது.
சௌத் இந்தியன் போர்டிங் ஹவுசில் இருந்த ஓர் அறையில் எம். பாலசுப்பிரமணி, ஏ.வி. குப்புசாமி உள்ளிட்ட சிலர் சேர்ந்து 1946-ம் ஆண்டில் தில்லித் தமிழ்ச் சங்கத்தை ஆரம்பித்தனர்.
பாலிகா பஜார் பகுதியில் இருந்த ஏ.ஆர்.பி. வார்டன் போஸ்ட் இருந்த கட்டட அறையில் ஆண்டுக்கு ஒரு ரூபாய் குத்தகை என்ற அடிப்படையில் தில்லித் தமிழ்ச் சங்கம் இயங்கி வந்தது. அப்போது, ராஜாஜி கவர்னர் ஜெனலராக இருந்தார்.
தில்லி கிளாத் மில்ஸ் நிறுவனத்தின் அதிகாரியாக அப்போது பணியாற்றிய ஜி.வி. பிள்ளை திருக்குறள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார். அவர் ஒவ்வொரு ரூபாயாக பலரிடமும் வசூலித்து திருக்குறளைத் தமிழ்ச் சங்கம் சார்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பதிப்பித்து ஒரு ரூபாய் விலைக்கு மலிவாக கொடுத்தார்.
கம்ப ராமாயணத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஏ.வி. வெங்கடசுப்பன் வெளியிட்டார். ஜனதா கட்சியின் தலைவராக தற்போதுள்ள சுப்பிரமணியன் சுவாமியின் தந்தை சுப்பிரமணியன்தான் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைவராக இருந்தவர். "புறநானூறு' சீனிவாசன் செயலராக இருந்தார்.
கரோல் பாகில் உள்ள ராமானுஜம் மேன்சனில் நான் தங்கியிருந்தேன். ரூ. 50 கொடுத்தால் காலை டிபன், மதியச் சாப்பாடு, இரவுச் சாப்பாடு, மாலையில் காபி- காரம் தருவார்கள்.
வீட்டு வாசலில் கயிற்றுக் கட்டில் போட்டுத்தான் அப்போதெல்லாம் தூங்குவார்கள். மாலை 6 மணிக்கு மேல் சாலைகளில் போக்குவரத்து இருக்காது. கோடைக்காலங்களில் வீட்டுக்கு முன்பாக தண்ணீர் தெளித்துவிட்டுத் தூங்குவோம். ஏ.சி. வசதியின்றி சுகமான தூக்கம் கண்களைத் தழுவிய காலம் அது.
அக்காலக்கட்டத்தில் தரைத்தளம், முதல் மாடி மட்டுமே கட்டப்பட வேண்டும் என்பது விதி. இதனால், பெரிய கட்டடங்களைப் பார்ப்பது அரிதாகவே இருக்கும்.
இசைக் கச்சேரி
இப்போது போன்று இலவச அனுமதியுடன் கூடிய இசைக் கச்சேரி எல்லாம் அப்போது நடத்தப்பட்டது கிடையாது. 1955-ம் ஆண்டுகளில் மந்திர் மார்க் அருகே உள்ள திறந்தவெளி இடத்தில்தான் மாதம் ஒருமுறை இசைக் கச்சேரி நடைபெறும்.
கர்நாடக சங்கீத சபா, சண்முகானந்தா சபா ஆகியோர் இக் கச்சேரிகளுக்கு ஏற்பாடு செய்து நடத்துவர். கச்சேரியைப் பார்ப்பதற்கு நுழைவுக் கட்டணமாக ரூ. 5, 10 வசூலிக்கப்படுவதுண்டு. சுமார் 1,000 பேர் வரை நிகழ்ச்சியைக் காண வருவர்.
இசைக் கலைஞர்கள் மதுரை மணி, செம்மங்குடி சீனிவாச ஐயர், டி.கே. பட்டம்மாள், எம்.எஸ். சுப்புலட்சுமி ஆகியோர் இக்கச்சேரிகளில் பாடியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். பூஜா பார்க்கில் மார்கழி மாதம் ஐயப்பப் பூஜை வெகு விமரிசையாக நடைபெறும். வங்காளிகள் நவராத்திரி காலங்களில் காளி பூஜையை வெகு சிறப்பாக நடத்துவர்.
அப்போதெல்லாம் மக்களிடம் ஒருவித ஒற்றுமையும், நெருக்கமும் இருந்தது. வெவ்வேறு இனம், மதம், கலாசாரத்தைப் பின்பற்றுபவர்களாக இருந்தாலும் புரிதலுடன் வாழ்ந்தனர் என்று கூறுகிறார் எஸ். கிருஷ்ணமூர்த்தி.
சியாமளா கிருஷ்ணமூர்த்தி (66) நினைவு கூர்ந்தவை:
""பொருளாதாரத் துறையில் நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் அவர்களின் மாணவி நான்.
ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் அறிவியல் அரசியல் மைய நூலகத்தில் பணியாற்றினேன். தென் இந்திய மாதர் சங்கத்தில் இணைந்து செயலாற்றி வருகிறேன். இந்த அமைப்பு தில்லியில் 1952-ம் ஆண்டிலேயே ஏற்படுத்தப்பட்டது.
ராஜலட்சுமி ராகவன் என்பவர் இதன் முதல் தலைவர். பிராமணப் பெண்மணிகள் சேர்ந்து இச்சங்கத்தை ஏற்படுத்தினர். வீட்டில் இருக்கும் பெண்கள் தங்களது பிள்ளைகளை எல்.கே.ஜி., யு.கே..ஜி. போன்ற மழலையர் படிப்புகளைக் கற்றுத் தருவதற்கு இந்த மாதர் சங்கம் பயன்பட்டது.
ஆரம்பத்தில் மெட்ராஸ் ஸ்கூல் வளாகத்தில் இந்தச் சங்கம் இயங்கி வந்தது. நான் இந்தக் கிளப்பில் 1986-ம் ஆண்டில் சேர்ந்தேன். பல பொறுப்புகளையும் வகித்துள்ளேன். இதன் தற்போதைய தலைவராக விமலா ராமாமிர்தமும், துணைத் தலைவராக ராஜம் தேவராஜனும் உள்ளனர்.
ஆண்டு விழா நடத்துவது, பொழுதுபோக்குப் பயணம் செல்வது, குழந்தைகளுக்கும், மகளிருக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது, ஆன்மிக சுற்றுப் பயணம் செல்வது ஆகிய செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...