காய்கறிகள் கெடாமல் பாதுகாக்க நானோ தொழில்நுட்பம்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலை.யில் ஆய்வு

கோவை, ஜூன் 4: காய்கறிகள், பழங்களை நானோ தொழில்நுட்பம் மூலம் கெடாமல் பாதுகாக்கும் ஆய்வில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.  இந்தியாவில் மொத்த காய்கறிகள், பழங்கள் உற்பத்தியில் சும
Updated on
2 min read

கோவை, ஜூன் 4: காய்கறிகள், பழங்களை நானோ தொழில்நுட்பம் மூலம் கெடாமல் பாதுகாக்கும் ஆய்வில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

 இந்தியாவில் மொத்த காய்கறிகள், பழங்கள் உற்பத்தியில் சுமார் 35 சதவீதம் அழுகிவிடுகின்றன. இதன் மதிப்பு சுமார் ரூ.46 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. விரைவில் அழுகிவிடும் காய்கறிகள், பழங்கள் 3 வாரங்கள் வரை கெடாமல் பாதுகாக்க நானோ ஃபிலிம் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது. அடுத்த ஓரிரு ஆண்டுகளில் இந்த தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இது தொடர்பான ஆய்வில் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது.

 நாட்டிலேயே முதன்முறையாக 2010-ம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவு தொடங்கப்பட்டது. ரூ.12 கோடி செலவில் நானோ மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

 வேளாண் இடுபொருள்களில் நானோ தொழில்நுட்பத்தைப் புகுத்துதல் தொடர்பான ஆய்வுகளில் விஞ்ஞானிகள், பேராசியர்கள், ஆய்வு மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இப்போது உரங்கள், பூச்சிக் கொல்லிகள்,

 களைக் கொல்லிகள், விதை தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன.÷நானோ தொழில்நுட்பம் புகுத்தப்பட்ட உரங்கள் தரமானதாகவும், விளைச்சலை பெருக்கும் தன்மை கொண்டவையாகவும் இருக்கும் வகையில் ஆய்வுகள் நடைபெறுகின்றன.

 மானாவாரி பயிர்களில் தேவையில்லாத களைக் கொல்லியை போக்க நானோ டியூப் என்ற தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது. இதில் களைக் கொல்லியில் நானோ டியூப் அடங்கியிருக்கும். மழை பெய்யும் நேரங்களில் இந்த டியூப் தானே நீரில் கரைந்துவிடும். டியூப்பில் இருந்து வெளியேறும் நானோ களைக்கொல்லி மூலம் பயிர்கள் வீணாவது தடுக்கப்படும்.

 இத்துடன் நானோ தொழில்நுட்பத்துடன் கூடிய விதையையும் உருவாக்கும் முயற்சி நடந்து வருகிறது. சாதாரணமாக 10 மாதம் முதல் 12 மாதங்கள் வரையிலான விதைகள் சீக்கிரமே கெட்டுப் போகும் தன்மை கொண்டதாகும். ஆனால், நானோ தொழில்நுட்பம் புகுத்தப்பட்ட விதைகள் பல ஆண்டுகளுக்கு கெட்டுப் போகாமல் இருக்கும்.

 நானோ ஃபிலிம்: காய்கறிகள், பழங்கள், இளநீர் மற்றும் கரும்புச்சாறு ஆகியவை சீக்கிரமே அழுகிவிடும் தன்மை கொண்டவை. இவற்றைப் பாதுகாக்க போதிய குளிர்சாதன வசதி இல்லாதது பெரும் குறையாக உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் நானோ ஃபிலிம் என்ற தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. பாலித்தீன் கவர் போல இருக்கும் உறையில் நானோ மூலக்கூறுகள் சேர்க்கப்படும். இந்த நானோ ஃபிலிம் உறையில் காய்கறியையோ அல்லது பழத்தையோ வைக்கும்போது மூன்று வாரங்கள் வரை கெடாமல் இருக்கும். மேலும், விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ள பூச்சித் தாக்குதல்களை முன்கூட்டியே கண்டறிய நானோ பயோ சென்சார் ஆய்வும் நடந்து வருகிறது.

 கூவம் ஆறு, நொய்யல் ஆறு ஆகியவற்றில் நானோ மூலக்கூறுகள் அடங்கிய பொருள்களை கலந்துவிடும்போது, நீரின் நச்சுத்தன்மை குறைந்து சுற்றுச்சூழல் மேம்பட நானோ தொழில்நுட்பம் உதவும் எனவும் கூறப்படுகிறது.

 நாட்டில் சுமார் 52 வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில் முதல்முறையாக விவசாயத்துறையில் நானோ தொழில்நுட்பத்தைப் புகுத்துதல் தொடர்பான ஆராய்ச்சியை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது.

 இப்போது ஆய்வக அளவில் மட்டுமே நடத்தப்பட்டு வரும் நானோ ஃபிலிம், நானோ டியூப் ஆராய்ச்சி, நானோ பயோ சென்சார் போன்ற தொழில்நுட்பங்கள் பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகு காப்புரிமை பெற்று வணிக ரீதியில் கொண்டுவர 2 முதல் 3 ஆண்டுகள் ஆகும் என்கிறார் நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவு துறைத் தலைவர் கே.எஸ்.சுப்பிரமணியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com