மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா பாஜக?
தில்லி மாநகராட்சிக்கான தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. குடிநீர், மின்சாரக் கட்டண உயர்வு இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குத் தோல்வியைத் தேடித் தந்ததாக குடியிருப்பு சங்கங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் தோ


தில்லி மாநகராட்சிக்கான தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. குடிநீர், மின்சாரக் கட்டண உயர்வு இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குத் தோல்வியைத் தேடித் தந்ததாக குடியிருப்பு சங்கங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் தோல்வியடைந்த காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகள், அதற்கான காரணங்களை ஆராய்ந்து வருவது ஒருபுறம் இருக்க, தங்கள் பிரச்னைகளைத் தீர்க்க புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கவுன்சிலர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதுதான் வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்பு.
தெற்கு தில்லி மாநகராட்சி
மூன்று மாநகராட்சிகளில் அதிக வசதி படைத்தவர்களைக் கொண்டது தெற்கு தில்லி மாநகராட்சி என்று கூறலாம்.
அதிக வசதி உடைய வீடுகள், வர்த்தக மையங்கள், பண்ணை வீடுகள் ஆகியவை இந்த மாநகராட்சி எல்லைக்குள் வருகின்றன. மற்ற இரு மாநகராட்சிகளை விட தெற்கு தில்லி மாநகராட்சிக்கு அதிகமாக வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பகுதியில் சரோஜினி மார்க்கெட் போன்ற வர்த்தக மையங்களில் போதிய பார்க்கிங் வசதி அமைக்கப்பட வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
"தில்லியில் அறிவிக்கப்பட்ட 15 அடுக்குமாடி வாகன நிறுத்துமிடங்களில் இதுவரை இரண்டு மட்டுமே பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மீதமுள்ளவை விரைந்து முடிக்கப்படுவதை புதிதாக பதவி ஏற்கும் தெற்கு தில்லி மாநகராட்சி துரிதப்படுத்த வேண்டும்' என்று சரோஜினி நகர் வியாபாரி தீபக் வலியுறுத்தினார்.
"பழுதடைந்த குடிநீர் மீட்டர்களை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். இரண்டு மாத குடிநீர் கட்டணம் மாத வீட்டு வாடகையை விட அதிகமாக வருகிறது. குடிநீர் கட்டணத்தைக் குறைக்க புதிய மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார் தெற்கு தில்லி குடியிருப்பு நல சங்க நிர்வாகி வாத்வானி.
வடக்கு தில்லி மாநகராட்சி
நடுத்தர வர்க்கத்தினர் அதிகமாக வசிக்கும் பகுதியாக வடக்கு தில்லி மாநகராட்சி கருதப்படுகிறது.
நரேலா, முன்டுகா, ரோஹிணி, கரோல் பாக், மாடல் டவுன் போன்ற பகுதிகள் வடக்கு தில்லி மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளன.
பழைய தில்லி பகுதி முழுவதும் வடக்கு தில்லி மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் வருகிறது.
இந்தப் பகுதியில் அடிப்படை சுகாதார வசதிகள் குறைவாகவும், பழைய கட்டடங்களும், அனுமதியில்லாமல் மேற்கொள்ளப்படும் கட்டட விரிவாக்கங்களும் பெரும் சவாலாக உள்ளன.
"கட்டட விரிவாக்க பணிகளின்போது விபத்து ஏற்பட்டு உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. குடிநீர்ப் பிரச்னை, சாலை நெரிசல் போன்ற பிரச்னைகளைத் தீர்க்க வடக்கு தில்லி மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தரியா கஞ்ச் பகுதி வாசி இந்தர் ஜீத் கூறினார்.
கிழக்கு தில்லி மாநகராட்சி
இந்தப் பகுதியில் அனுமதி இல்லாத காலனிகள் ஏராளமாக உள்ளதால் வளர்ச்சி பணிகள் நடைபெறாமல் உள்ளன என்று கூறப்படுகிறது.
அண்டை மாநிலங்களில் இருந்த தில்லிக்கு வேலை தேடி வந்தவர்களின் புகலிடமாக இங்கு ஏராளமான பகுதிகள் உள்ளன.
கிழக்கு மாநகராட்சி எல்லைக்குள் அடிப்படை வசதிகள் இல்லாத பகுதிகள் ஏராளமாக உள்ளன. பிற மாநகராட்சிகளை ஒப்பிடும் போது இந்த மாநகராட்சிக்குக் குறைவான வரி வருவாய்தான் கிடைக்கும் என்று தெரிகிறது.
பொறுப்பு அதிகரிப்பு
"மக்களின் நம்பிக்கையைப் பெறுவது கடினமான காரியம். அதை மாநகராட்சி தேர்தலில் பாஜக பெற்றுள்ளது. மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் பொறுப்பு பாஜக கவுன்சிலர்களிடம் உள்ளது.
மக்களை சந்தித்து அவர்களின் குறைகள் மீது கவுன்சிலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பாஜக மாநிலத் தலைவர் விஜேந்தர் குப்தா கூறினார்.
கட்சிகளுக்குப் பாடம்
தில்லி மாநகராட்சி பகுதியில் ஏராளமான பிரச்னைகள் இருந்தும் பாஜகவுக்கு மீண்டும் மக்கள் வாய்ப்பு அளித்துள்ளனர்.
இந்த நிலையில், மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க பாஜக என்ன செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியிருக்கிறது.
"தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையம்தான் மின்கட்டண உயர்வை நிர்ணயம் செய்கிறது. குடிநீர், மின்சாரக் கட்டண உயர்வுக்கு தில்லி அரசு பொறுப்பல்ல' என்று தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் ஷீலா தீட்சித் கூறிவந்தார்.
இந்த விளக்கத்தை மக்கள் ஏற்று கொண்டதாகத தெரியவில்லை.
இதையே மாநகராட்சித் தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்துகின்றன.
மக்களின் தேவைகளை நிறைவேற்றத் தவறினால் எவ்வளவு பலம் படைத்திருந்தாலும் தேர்தல் முடிவுகள் அரசனையும் ஆண்டியாக்கிவிடும் என்பது அரசியல் கட்சிகளுக்கு மக்கள் புகட்டும் பாடம்.
இதில் அரசன் ஆவதும், ஆண்டியாவதும் அரசியல் கட்சிகளின் நடவடிக்கையில்தான் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...