தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

முல்லைப் பெரியாறில் புதிய அணை: மத்திய அரசிடம் திட்ட அறிக்கை அளித்தது கேரளம்

புது தில்லி, ஏப். 20: முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை (டி.பி.ஆர்.) மத்திய நீர் வளத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சாலிடம் கேரள முதல்வர் உம்மன் சாண்டி வெள்

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:45 pm

அ. சர்ஃப்ராஸ்

புது தில்லி, ஏப். 20: முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை (டி.பி.ஆர்.) மத்திய நீர் வளத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சாலிடம் கேரள முதல்வர் உம்மன் சாண்டி வெள்ளிக்கிழமை அளித்தார்.

தில்லி வந்துள்ள கேரள முதல்வர், மத்திய நீர்வளத் துறை அமைச்சர் பவன்குமார் பன்சாலை வெள்ளிக்கிழமை மாலையில் அவரது அலுவலகத்தில் சந்தித்தார். கேரள நீர்வள அமைச்சர் பி.ஜே. ஜோசப், அம் மாநில நீர்வளத் துறை அதிகாரிகள் இந்தச் சந்திப்பின்போது உடனிருந்தனர். சுமார் 30 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது, முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான தேவையையும் திட்டத்தின் பயன்கள் தொடர்பாகவும் தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை உம்மன் சாண்டி, பவன்குமார் பன்சாலிடம் அளித்தார்.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பி.ஜே. ஜோசப் கூறியது:

""புதிய அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் அளித்துள்ளோம். அதன்படி, புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளோம்'' என்று கூறினார்.

கேரள அறிக்கையின் சாரம்சம்: நான்கு பகுதிகளைக் கொண்ட விரிவான திட்ட அறிக்கையில் புதிய அணையின் வரைபடம், இயற்கைச் சூழல் ஆய்வு, சுற்றுச்சூழல் ஆய்வு, அணை வடிவமைப்புத் திட்டம் ஆகியவை இடம் பெற்றுள்ளது.

புதிய அணை கட்ட ரூ. 663 கோடி செலவாகும்.

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் இருந்து 360 கிலோ மீட்டர் அடிமட்டத்தில் நான்கு ஆண்டு காலத்தில் புதிய அணை கட்டி முடிக்கப்படும். புதிய அணை கட்டி முடித்ததும் பழைய அணையின் ஒரு சில பகுதிகள் இடிக்கப்பட வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் நியமித்த அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவிடம் கேரள அரசு கடந்த ஆண்டு இதே அறிக்கையை சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.

புதிய அணையில் ஆய்வு: முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கேரள அரசுக்கு கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது.

அதைத்தொடர்ந்து, புதிய அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை கேரள அரசு தயாரித்துள்ளது.

புதிய அணை கட்ட மத்திய திட்டக் குழு நிதி?: 2012-13ம் நிதியாண்டில் கேரள மாநிலத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கு அதிக நிதி வழங்க வேண்டும் என்று மத்தியத் திட்டக் குழு துணைத் தலைவர் மாண்டெக் சிங் அலுவாலியாவிடம் கேரள முதல்வர் உம்மன் சாண்டி கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக திட்டக்குழுக் கூட்டத்தில் கேரள முதல்வர் உம்மன் சாண்டி

பேசியது:

""கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட இந்த ஆண்டு 16.65 சதவீதம் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியுதவி மூலம் புதிய முல்லைப் பெரியாறு அணை கட்டவும், கடலோரப் பகுதிகளை மேம்படுத்தவும், சபரிமலா "மாஸ்டர் பிளான்' போன்ற திட்டங்களைச் செயல்படுத்த கேரள அரசு சிறப்புக் கவனம் செலுத்தும்.

கேரளத்தில் நிலவி வரும் மின் பற்றாக்குறையைப் போக்க நீர் மின் திட்டங்கள் தொடங்கப்படும்'' என்று உம்மன் சாண்டி தெரிவித்தார்.

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டும் திட்டத்துக்கு கேரள அரசு ஏற்கெனவே நடப்பு நிதியாண்டில் ரூ. 50 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.