தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திக்கற்று நிற்கும் "சிவா கேம்ப்' மக்கள்

வீடு என்பது ஒவ்வொருவருக்கும் இன்றிமையாத தேவை. வீட்டை வேறு இடத்துக்கு மாற்றுவதற்குக் கூட பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய இன்றைய சூழலில், குடியிருக்கும் வீடுகள் இடிக்கப்பட்டால்... எவ்வளவு இன்னல்கள்? வசந

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:46 pm

அ. சர்ஃப்ராஸ்

வீடு என்பது ஒவ்வொருவருக்கும் இன்றிமையாத தேவை. வீட்டை வேறு இடத்துக்கு மாற்றுவதற்குக் கூட பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய இன்றைய சூழலில், குடியிருக்கும் வீடுகள் இடிக்கப்பட்டால்... எவ்வளவு இன்னல்கள்?

வசந்த விஹார் பகுதியில் சாலை ஒரமாக உள்ள சிவா கேம்பில் வாழ்ந்து வருவோரின் குடிசைகள் வியாழக்கிழமை இடிக்கப்பட்டன.

ஆக்கிரமிப்புப் பகுதியில் உள்ள குடிசைகள் இடிக்கப்பட்டன என்றாலும் அவர்களுக்கு மாற்று இடத்தை தர அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

அதனால் மேம்பாலத்தின் கீழ் குழந்தைகளுடன், பெட்டி படுக்கை, பொருட்களுடன் வாழ்க்கையை நடத்த வேண்டிய நிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

மாநகராட்சித் தேர்தல் முடியும் வரை காத்திருந்து அரசு தங்களை தண்டித்துவிட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த நிலைக்கு யார் பொறுப்பேற்பது என்பது கேள்விக் குறியாக உள்ளது.

300 வீடுகள்

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக, வசந்த் விஹார் பகுதியில் "சிவா கேம்ப்' பகுதியில் வாழ்ந்து வருபவர்கள் அந்த மக்கள்.

சுமார் 300 வீடுகள் உள்ள அந்தப் பகுதியில், பெரும்பான்மையாக வசிப்பவர்கள் தமிழர்கள். அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு போன்றவை உள்ளன. மின் இûணைப்பு பெற்று அதற்கு கட்டணமும் செலுத்தி வருகின்றனர்.

மேம்பாலத்தின் கீழ் வாழ்க்கை

சிவா கேம்ப் பகுதியில் உள்ள 40-க்கும் மேற்பட்ட குடிசைகளை மாநகராட்சி அதிகாரிகள் புல்டோசர்களை வைத்து இடித்து விட்டனர்.

"முன் அறிவிப்பு அளிக்காமல் எங்கள் குடியிருப்புகளை அதிகாரிகள் இடித்து விட்டதால்

உடைமைகள், பொருட்களை எடுக்க முடியவில்லை. தற்போது ரோட்டில்தான் வாழ்ந்து வருகிறோம்' என்கிறார் அப்பகுதிவாசி விஜயகுமார்.

"குடிசைகள் அகற்றப்பட்ட பின்பு அருகில் உள்ள மாநகராட்சிப் பூங்காவில் தஞ்சம் புகுந்தோம். ஆனால் அங்கு அனுமதி மறுக்கப்பட்டதால் எங்கு போவது என்று தெரியாமல் எங்கள் வீடுகளுக்கு எதிரே உள்ள மேம்பாலத்தின் கீழ் குழந்தைகளுடன் வாழ்கிறோம்' என்று தெரிவித்தார், பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான சபீர்.

"மழைக்காலங்களில் குடிசைகள் மூழ்கும் அளவுக்கு மழை நீர் வந்துவிடுகிறது. மாநகராட்சித் தேர்தல் முடியும் வரை காத்திருந்து குடிசைகளை அரசு அப்புறப்படுத்தியுள்ளது' என்கிறார், பாதிக்கப்பட்டவர்களில் மற்றொருவரான பெரியசாமி. "இந்த விவகாரத்தை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அஜய் மாக்கன், தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், அப்பகுதி எம்.எல்.ஏ. பர்கா சிங் ஆகியோரிடம் சனிக்கிழமை முறையிட்டோம். யாரும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கவில்லை' என்று அப்பகுதியைச் சேர்ந்த பாரதிராஜா தெரிவித்தார்.

முன்னெச்சரிக்கை அறிக்கை

எச்சரிக்கை அறிக்கை அளித்த பின்பும் அப்பகுதி மக்கள் காலி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் அப்பகுதியை அதிரடியாக காலி செய்யும் நடவடிக்கையை எடுத்ததாக தில்லி மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர். அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு பின்பு "நாளா' எனப்படும் கழிவு நீர் வடிகால் உள்ளது. மழைக்காலங்களில் அதில் வரும் வெள்ளம், அருகில் உள்ள வீடுகளில் நுழையாமல் தடுப்பதற்காக வடிகாலின் இருபுறமும் சுவர் எழுப்பவே மாநகராட்சி வீடுகளை காலி செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

யார் காரணம்?

இந்த பகுதியில் குடிசைகளை அமைத்த போது போலீஸார் எங்களிடம் கையூட்டாக பணம் பெற்று கொண்டனர். அதிக பணம் அளித்தவர்களுக்கு இங்கு குடிசைகள் அமைக்க காவல்துறையினர் அனுமதித்ததாகவும், ஆனால் தற்போது அரசு உத்தரவு என்று கூறி குடிசைகள் இடிக்கப்பட்டுள்ளன என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். தேர்தலில் வாக்குகளைக் கேட்டு குடிசைப் பகுதிகளுக்கு சென்ற வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு அந்த குடிசைவாசிகளை கண்டு கொள்ளாமல் இருப்பது அப்பகுதி மக்களை மிகவும் வேதனையடையச் செய்திருக்கிறது.

படங்கள் கே.டி.ராமகிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.