புது தில்லி, பிப். 10: மத்திய பொது பட்ஜெட்டில் மகளிர் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்பட ஒன்பது மகளிர் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தில்லியில் வெள்ளிக்கிழமை மகளிர் அமைப்புகள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தற்போதைய வளர்ச்சித் திட்டங்கள் பெண்களை மேலும் விளிம்பு நிலைக்கு தள்ளுகின்றன.
எனவே வரும் பொது பட்ஜெட்டில் பெண்களின் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு போதுமான நிதியை ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக முன் பேர வர்த்தகத்தையும், ஆன்- லைன் வர்த்தகத்தையும் தடை செய்ய வேண்டும். இஷ்டம் போல எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்தி வருவதை அரசு கட்டுப்படுத்த வேண்டும்.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் படி, அனைவருக்கும் 35 கிலோ உணவுப் பொருள்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். பொது விநியோகம் சீர் குலைவதைத் தடுக்க உணவு தானியங்களுக்குப் பதில் பணம் வழங்கப்படுவதை நிறுத்த வேண்டும். இதற்காக உணவுப் பொருள்களுக்கு வழங்கும் மானியத்தை உயர்த்த வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் 200 நாள்களுக்கு வேலை அளிக்கவும், குறைந்தபட்ச ஊதியத்தை சட்டப்படி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிராமப்புறங்களில் சுகாதாரத்தை மேம்படுத்த தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்துக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் ஒதுக்க வேண்டும். பொது சுகாதாரத் திட்டத்தில் வசூலிக்கப்படும் கட்டணங்களை ஒழிக்க வேண்டும். அத்தியாவசிய மருந்துப் பொருள்கள் அனைவருக்கும் கிடைக்க வகை செய்ய வேண்டும்.
முறைசாராத் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்காக நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அங்கன்வாடி, தேசிய ஊரக சுகாதாரத் திட்டம், மதிய உணவு சத்துணவுத் திட்டம் ஆகிய நலத் திட்டப் பணிகளில் வேலை பார்க்கும் பெண்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்து, அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்துக்கு கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும். இந்திரா காந்தி மகப்பேறு உதவி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ. 4 ஆயிரம் நிதியுதவியை கருவுற்ற தாய்மார்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.