நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

டெங்கு, சிக்குன்குனியா தாக்கம் அதிகரிப்பு: களைகட்டுகிறது கொசு விரட்டி சாதனங்கள் விற்பனை!

தேசியத் தலைநகர் தில்லியில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், கொசுக்களை விரட்டும் சாதனங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

News image
Updated On :19 செப்டம்பர் 2016, 9:27 am

வே.சுந்தரேஸ்வரன்

தேசியத் தலைநகர் தில்லியில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், கொசுக்களை விரட்டும் சாதனங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது.
தில்லியில் இந்த மழைக்கால பருவத்தில் கொசுக்கள் பெருக்கத்தால் பரவும் நோய்களான டெங்கு, சிக்குன்குனியா ஆகியவற்றின் பாதிப்பு கடந்த ஒரு மாதமாக மிகவும் அதிகரித்துள்ளது. சிக்குன்குனியா, டெங்கு நோய் தாக்கியவர்களின் எண்ணிக்கை 2,500-ஐ  கடந்துவிட்டது. இந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33-ஐ தாண்டியுள்ளது. இதனால், இந்நோய்களின் பிடியில் இருந்து தப்பிக்கும் வகையில், பொதுமக்கள் தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்கும் பொருட்டு வீடுகள், அலுவலகங்களில் கொசு விரட்டிகள், கொசு உற்பத்தியாகாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

கொசு விரட்டிகள் விற்பனை:  கொசுக்கள் உற்பத்தியாவதற்கு நீர் தேங்காமல் இருப்பது அவசியம் என்பதால் வீடுகள், அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் ஏர்கூலர், பூந்தொட்டிகள், ஏ.சி. போன்ற சாதனங்களில் நீரைத் தொடர்ந்து தேங்கவிடாமல் அவ்வப்போது அகற்ற வேண்டும் என்று மாநகராட்சியும், அரசும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன.

எனினும், வீடுகளில் சுற்றி வரும் கொசுக்களின் கடியில் இருந்து தப்பிக்கும் வகையில், கொசு விரட்டி திரவங்கள், சுருள்கள், கையில் பூசும் ஓடோமோஸ் போன்ற களிம்புகள் கையடக்க மின்னணு கொசுவிரட்டி விசிறிகள், கொசுவலைகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவது பரவலாக இருந்து வருகிறது. இதனால், இவற்றின் விற்பனையும் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
கொசு விரட்டி சாதனங்கள், பொருள்களை விற்பனை செய்து வரும் தர்யாகஞ்ச் பகுதியைச் சேர்ந்த கடைக்காரர் ராகுல் ஜெயந்த் கூறியதாவது: பொதுவாக ஆண்டுதோறும் மழைக்கால பருவத்தில் ஆகஸ்ட் மாதம் வரை கொசு விரட்டி சாதனங்களின் விற்பனை நன்றாக இருக்கும். அதன் பிறகு வரும் மாதங்களில் விற்பனை வழக்கமான அளவில்தான் இருக்கும். ஆனால், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிந்து செப்டம்பரிலும் கொசு விரட்டி சாதனங்கள் விற்பனை நன்றாக இருக்கிறது.

குறிப்பாக முன்னணி நிறுவனங்களின் கொசு விரட்டி திரவங்கள், களிம்புகள், சுருள்கள், அகர்பத்திகள் விற்பனை நன்றாக இருக்கிறது.

ஒரு நபர் படுத்து உறங்கக் கூடிய கொசு வலைகள் ரூ.70 முதல் ரூ.200 வரையிலான விலையில் தரத்திற்கு ஏற்ப விற்கிறோம். சாலைகள், நடைபாதைகளில் இரவில் படுத்துறங்கும் தொழிலாளர்கள் இதுபோன்ற கொசுவலைகளை பரவலாக வாங்கிச் செல்கின்றனர். வீடுகளில் வசிப்போர் கொசு விரட்டி திரவங்களையும், சுருள்களையும் அதிகமாக வாங்கிச் செல்கின்றனர் என்றார் அவர்.
தர்யாகஞ்ச் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த 90 வயது மூதாட்டி பிஸ்மில்லா கூறுகையில், "எங்கள் வீட்டில் முன்பு கொசு வலைகளை அதிகம் பயன்படுத்தினோம். தற்போது கொசு விரட்டி திரவம், சுருள் ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்புகூட இதுபோன்று அதிகளவில் கொசுத் தொல்லை இல்லை.  தற்போது எனது உறவினர்கள் சிலருக்கு சிக்குன்குனியா நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், வீட்டில் தினமும் கொசு விரட்டி சாதனங்களைப் பயன்படுத்தி வருகிறோம்' என்றார்.

தில்லி கேட் பகுதியைச் சேர்ந்த முதியவர் லேக்ராஜ் (80) கூறுகையில், "தற்போதைய சூழலில் வீடுகளில் இடநெருக்கடி காரணமாக கொசு வலைகளைப் பயன்படுத்த இயலவில்லை என்பதால் கொசு விரட்டி சாதனங்களைப் பயன்படுத்தி வருகிறோம். தில்லியில் அதிகளவு கொசுப் பெருக்கத்துக்கு மாசு ஒரு காரணமாக உள்ளது' என்றார்.

தில்லி கேட் பகுதியைச் சேர்ந்த கோயில் ஊழியர் ராம் நாராயணன் கூறுகையில், "இன்றைய சூழலில் கொசுக்கள் உற்பத்திக்கு முக்கியக் காரணம் சுற்றுப்புற சுகாதாரக் கேடுதான்.

வீட்டை தூய்மையாக வைத்திருப்பது போல சுற்றுப்புறச் சூழலையும் தூய்மை வைத்திருப்பது அவசியமாகும். எங்கள் வீட்டில் நாங்கள் கொசுவலையுடன் பிற கொசு விரட்டி சாதனங்களையும் பயன்படுத்துகிறோம். தவிர, வீட்டின் சுற்றுப்புறத்தைப் பராமரிப்பதிலும் கவனம் செலுத்துகிறோம்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.