கேஜரிவால் இல்லம் அருகே பாஜக ஆர்பாட்டம்: குடிநீர், கழிவுநீர் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு

தில்லியில் குடிநீர், கழிவுநீர் கட்டணங்களை கூட்டாக 20 சதவீதம் உயர்த்த தில்லி அரசு முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தில்லி பாஜக சார்பில்
Updated on
1 min read

தில்லியில் குடிநீர், கழிவுநீர் கட்டணங்களை கூட்டாக 20 சதவீதம் உயர்த்த தில்லி அரசு முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தில்லி பாஜக சார்பில் முதல்வர் கேஜரிவாலின் இல்லம் அருகே வியாழக்கிழமை ஆர்பாட்டம் நடைபெற்றது. 
இந்த ஆர்பாட்டத்தில்  தில்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா, பாஜகவின் தில்லி  தலைவர் மனோஜ் திவாரி,   பவன் சர்மா, ரஜீவ் பாபர், ரவீந்தர் குப்தா, ராஜேஷ் பாட்டியா, ஜெய் பிரகாஷ், பூனம் பிரஷார் ஜா, சுனில் ஜாதவ் உள்ளிட்ட பாஜகவின் முக்கியத் தலைவர்கள்கலந்து கொண்டனர்.
  ஆர்ப்பாட்டத்தின் போது  விஜேந்தர் குப்தா பேசுகையில், "ஜல்போர்டு லாபத்தில் இயங்கி வருவதாக சில மாதங்களுக்கு முன்பு சொன்ன கேஜரிவால், இப்போது ஏன் குடிநீர்க் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும்? அனைவருக்கும் இலவசக் குடிநீர்,  சலுகை விலையில் மின்சாரம் தருவதாக வாக்குறுதி அளித்தே கேஜரிவால் ஆட்சிக்கு வந்தார். ஆனால், வாக்குறுதிக்கு மாறாக குடிநீர் மீட்டர் உள்ள வீடுகளுக்கு மட்டுமே 20,000 லீட்டர் இலவச குடிநீர் வழங்கப்படுகிறது.  குடிநீர் மீட்டர் இல்லாத பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்கும், சட்ட அங்கீகாரம் இல்லாத காலனிகளுக்கும் இந்தச் சலுகை வழங்கப்படவில்லை. அந்த ஏழை மக்களை கேஜரிவால் பொய் சொல்லி ஏமாற்றி விட்டார். இக்கட்டண உயர்வால் தில்லி மக்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள்' என்றார்.
பாஜக தில்லி தலைவர் மனோஜ் திவாரி பேசுகையில், "இலவசக் குடிநீர் வழங்குவதாக வாக்குறுதி அளித்துவிட்டு எதற்காக குடிநீர்க் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும்? கேஜரிவால் அரசின் குடிநீர்க் கட்டண உயர்வால் ஏழை மக்கள் மட்டுமல்ல, நடுத்தர மக்களும் பாதிக்கப்படுவர். குடிநீர் மீட்டர் இல்லாத வீடுகளில் வசிக்கும் மக்கள் ஏற்கனவே பெருந்தொகையை குடிநீர்க் கட்டணமாக செலுத்தி வருகின்றனர். இதனால், அவர்கள் மீது  சுமை மேலும்அதிகரிக்கப்பட்டுள்ளது' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com