நெடுஞ்சாலைப் பணி ஒப்பந்தங்களை விரைந்து வழங்க மக்களவையில் அதிமுக எம்.பி. வலியுறுத்தல்

தேசிய நெடுஞ்சாலைப் பணி ஒப்பந்தங்களை விரைந்து வழங்க வேண்டும் என்று மக்களவையில் சிதம்பரம் தொகுதி அதிமுக உறுப்பினர் எம்.சந்திரகாசி வலியுறுத்தினார்.
Updated on
1 min read

தேசிய நெடுஞ்சாலைப் பணி ஒப்பந்தங்களை விரைந்து வழங்க வேண்டும் என்று மக்களவையில் சிதம்பரம் தொகுதி அதிமுக உறுப்பினர் எம்.சந்திரகாசி வலியுறுத்தினார்.
இது தொடர்பாக மக்களவையில் வியாழக்கிழமை பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை அவையின் கவனத்திற்குக் கொண்டு வரும் நேரத்தில் எம்.சந்திரகாசி பேசியதாவது:  
எனது தொகுதிக்குள்பட்ட பகுதியில் காட்டுமன்னார்கோவில் வழியாக சிதம்பரத்தில் இருந்து திருச்சிக்கு தேசிய நெடுஞ்சாலை (எண்:227),  புதுச்சேரி வழியாக விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரையிலும் தேசிய நெடுஞ்சாலை (எண்:45) பணிகள் ஒப்பந்தம் இன்னும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளன.  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் சாலைத் திட்டங்களுக்கு சிறப்புக் கவனம் அளித்தார்.  தேசிய நெடுஞ்சாலை எண்  227 தொடர்புடைய சாலைப் பணிக்கு 90 சதவீதம் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 
அதேபோன்று, தேசியநெடுஞ்சாலை எண்  45-க்கான சாலைப் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த இரு சாலைத் திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை  முன்னுரிமை அடிப்படையில்  வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மாநிலங்களவையில்...:  மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் எஸ். முத்துக்கருப்பன் வியாழக்கிழமை முன்வைத்த கோரிக்கையில், " தமிழகத்தில் கோயம்புத்தூரில் செயல்படும் கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தையும்,  திருச்சியில் செயல்படும் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தையும்,  சென்னையில் செயல்படும் உவர்நீர் மீன்வளர்ப்பு மத்திய நிறுவனத்தையும் மூடவோ அல்லது  நாட்டில் பிற இடங்களில் செயல்படும் இந்திய தேசிய ஆராய்ச்சிக் கவுன்சில் நிறுவனங்களுடன் இணைக்கவோ உள்ளதாகக் கூறப்படுகிறது.  
கோவையில் செயல்படும் கரும்பு இனப்பெருக்க மையமானது, கடந்த 1912 முதல் விவசாயிகளுக்கு சேவை அளித்து வருகிறது.  
அதேபோன்று,  திருச்சியில் உள்ள வாழை ஆராய்ச்சி மையம், வாழை உற்பத்தியைப் பெருக்குவதற்கான தனது பங்களிப்பு சிறப்புடன் அளித்து வருகிறது.  
சென்னையில் செயல்படும் உவர்நீர் மீன் வளர்ப்பு மத்திய நிறுவனமானது தமிழகம் மற்றும் இதர கடலோர மாநிலங்களுக்கு தொழில்நுட்ப உதவிகளை அளித்து வருகிறது.  
இதனால், இந்த மூன்று நிறுவனங்களையும் பிற இடங்களில் செயல்படும் நிறுவனங்களுடன் இணைக்கும் முடிவு ஏதும் இருந்தால் அதை மத்திய அரசு கைவிட  வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com