குடிசைவாசிகளின் நலனை புறக்கணித்த ஆம் ஆத்மி அரசு: காங்கிரஸ் சாடல்

குடிசைவாசிகள், சாலையோர வியாபாரிகளின் நலனை ஆம் ஆத்மி அரசு புறக்கணித்துள்ளது என தில்லி பிரதேச காங்கிரஸ் சாடியுள்ளது.
Updated on
1 min read

குடிசைவாசிகள், சாலையோர வியாபாரிகளின் நலனை ஆம் ஆத்மி அரசு புறக்கணித்துள்ளது என தில்லி பிரதேச காங்கிரஸ் சாடியுள்ளது.
இதுகுறித்து தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுபாஷ் சோப்ரா, மகளிர் காங்கிரஸ் தலைவர் ஷர்மிஸ்தா முகர்ஜி ஆகியோர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
அங்கீகாரமற்ற காலனிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஆம் ஆத்மி அரசு தவறிவிட்டது. ஆட்சி அமைத்து 3 ஆண்டுகள் நிறைவடையுள்ள நிலையில் காலனி கூட முறைப்படுத்தப்படவில்லை. இக்காலனிகளில் வாழும் 40 லட்சம் பேரை மாற்றாந்தாய் மனப்போக்குடன் ஆம் ஆத்மி அரசு அணுகி வருகிறது. 
அங்கீகாரமற்ற காலனிகளில் வளர்ச்சிப் பணிகளுக்கு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ரூ. 4,200 கோடி செலவிடப்பட்டது. 895 அங்கீகாரமற்ற காலனிகள் முறைப்படுத்தப்பட்டன. காங்கிரஸ் ஆட்சிக்குப் பின் இக்காலனிகளில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. 5 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு உரிமங்கள் வழங்குவதற்குப் பதிலாக 1.65 லட்சம் சாலையோர வியாபாரிகள் கடந்த 3 ஆண்டுகளில் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். 
அடித்தட்டு மக்களுக்கு 200 ஏக்கர் காலி இடங்களில் வீடுகள் கட்டித்தரப்படும் என ஆம் ஆத்மி கட்சியின் 2015-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. நிலம் இருந்தும் வீடுகள் கட்டுவது குறித்து ஆம் ஆத்மி அரசு அக்கறை கொள்ளவில்லை.
ஆம் ஆத்மி கட்சி அளித்த வாக்குறுதிகள் அனைத்து காகிதத்தில் மட்டுமே உள்ளன. குடிசைகள் இருக்கும் இடத்திலேயே கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் எனக் கூறி குடிசைவாசிகளை தவறாக வழிநடத்துகிறது. ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் கால்காஜி விரிவாக்கத்தில் 3 ஆயிரம் குடிசைகளுக்கான மேம்பாட்டுத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 2013-ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டன' என்றனர்.
பேட்டியின் போது, கட்சியின் மூத்த தலைவர் சத்தார் சிங், இந்திய புரஃபஸனல் காங்கிரஸ் அமைப்பின் தில்லி பிரிவுத் தலைவர் அமன் பன்வர், செய்தித் தொடர்பாளர் பூஜா பஹ்ரி, ஊடக ஒருங்கிணைப்பாளர் மெஹந்தி மஜீத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com