தேசியத் தலைநகர் வலயம் குருகிராமில் தனியார் பள்ளியில் 7 வயது மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 16 வயது மாணவருக்கு எதிராக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை குருகிராம் நீதிமன்றம் திங்கள்கிழமை கவனத்தில் எடுத்துக்கொண்டது.
குருகிராமின் போண்ட்ஸி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்த ஏழு வயது மாணவர் பள்ளியின் கழிப்பறைக்குகள் கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை முதலில் விசாரித்த குருகிராம் காவல் துறையினர், பள்ளிப் பேருந்தில் உதவியாளராக இருந்த அசோக் குமார் என்பவரைக் கைது செய்தனர். இதனிடையே, இறந்த மாணவனின் பெற்றோர் விடுத்த கோரிக்கையை ஏற்று, கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றி ஹரியணா முதல்வர் மனோகர் லால் கட்டர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், அதே பள்ளியில் படித்த 11-ஆம் வகுப்பு மாணவர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். தேர்வுகள் தள்ளிப் போக வேண்டும் என்ற நோக்கில் சிறுவனை சம்பந்தப்பட்ட மாணவர் கொலை செய்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஏற்கெனவே கைதான அசோக் குமாருக்கு எதிரான எந்த ஆதாரங்களும் இல்லை என்பதால் வழக்கில் இருந்து அவரை விடுவிக்கவும் போலீஸ் தரப்பில் கோரப்பட்டது.
இதனிடையே, ஜாமீன் கோரி குற்றம்சாட்டப்பட்ட 16 வயது மாணவர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை நீதிமன்றம் கடந்த ஜனவரி 8-ஆம் தேதி நிராகரித்தது. அத்துடன், மனுவை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாக கூறி ரூ.21 ஆயிரம் அபராதமாக செலுத்தவும் மாணவரின் தந்தைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே, 16 வயதாகும் அந்த மாணவரை சிறுவனாக அல்லாமல் இளைஞராக கருதி விசாரணை நடத்த வேண்டும் என்று சிறார் நீதி ஆணையம் கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து மாணவரின் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட மனு மீதான இரு தரப்பு விசாரணை பிப்ரவரி 17-ஆம் தேதி நடைபெற உள்ளது.
குருகிராம் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் சிபிஐ போலீஸார் கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், செப்டம்பர் 8-ஆம் தேதி நிகழ்ந்த கொலையில் 16 வயது மாணவருக்கு தொடர்பு இருப்பதற்கான போதிய ஆதாரங்கள் இருப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றம்சாட்டப்பட்ட 16 வயது மாணவரின் பெயரை ஊடகங்களில் வெளியிட தடை விதித்திருந்த நீதிமன்றம், கொலை செய்யப்பட்ட ஏழு வயது மாணவரின் பெயரை "பிரின்ஸ்' என்றும், குற்றம்சாட்டப்பட்ட சிறாரின் பெயரை "போலு' என்றும் சம்பந்தப்பட்ட பள்ளியை "வித்யாலயா' என்றும் பயன்படுத்துமாறு ஊடகங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை குருகிராம் நீதிமன்றம் திங்கள்கிழமை கவனத்தில் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. நீதிமன்ற அறையில் நடைபெற்ற விசாரணையின்போது , சிறுவனை கொலை செய்ததற்கான முகாந்திரம் இருப்பதற்கான போதிய ஆதாரங்கள் குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிரான இறுதி அறிக்கையில் இருப்பதை கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஜஸ்பிர் சிங் குண்டு கவனத்தில் எடுத்துக்கொண்டதாக தகவலறிந்த நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
விசாரணையின்போது பாதிக்கப்பட்ட தந்தையின் சார்பில் வழக்குரைஞர் சுஷில் டேக்ரிவால் ஆஜரானார். நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு குற்றம்சாட்டப்பட்டவருக்கு குற்றப்பத்திரிகையின் நகலை சிபிஐ போலீஸார் வழங்கினர். தற்போது இந்த வழக்கின் குற்றப் பத்திரிகை மீதான விசாரணையை பிப்ரவரி 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அதுவரை குற்றம்சாட்டப்பட்டவரின் நீதிமன்றக் காவலையும் நீடித்து உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.