தங்கள் தரப்பு வாதங்களை விளக்க வாய்ப்பு அளிக்காமல், தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய பரிந்துரைத்துவிட்டதாக தில்லி உயர் நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக 20 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, சந்தர் சேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு தினந்தோறும் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சாப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கே.வி. விஸ்வநாதன் முன்வைத்த வாதம்:
ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுக்கு எதிரான புகாரை தேர்தல் ஆணையம் விசாரித்து வந்தபோது, இதுதொடர்பாக எந்தவித தகவலும் சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்களுக்கு தெரிவிக்க வில்லை. இது இயற்கை நீதியை மீறிய செயலாகும். இதையடுத்து ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவருக்கு செய்த பரிந்துரை தவறானது மட்டுமல்ல, சுதந்திரமான அமைப்பான தேர்தல் ஆணையம் தனது பணியை நேர்மையாக ஆற்றாதது துரதிருஷ்டவசமானது.
முழு அளவிலான விசாரணை நடத்தாமல் அரசு பணியில் உள்ள தாற்காலிக ஊழியரை தவறான நடவடிக்கையின் அடிப்படையில் பணி நீக்கம் செய்ய முடியாது. அப்படிஇருக்கும்போது, சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் முழு அளவிலான விசாரணை நடத்தாமலும், ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகித்தார்களா என்று அவர்கள் தரப்பு விளக்கங்களை அளிக்க வாய்ப்பு அளிக்காமலும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து 20 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்' என்றார்.
ஆம் ஆத்மி எம்எல்ஏக்களின் தரப்பு வாதம் திங்கள்கிழமை சுமார் மூன்றரை மணி நேரம் நீடித்தது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை செவ்வாய்க்கிழமையும் தொடரும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பின்னணி: ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகித்ததற்காக 20 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களைத் தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் ஜனவரி 19-ம் தேதி பரிந்துரை செய்தது. இதற்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஜனவரி 20-ம் தேதி ஒப்புதல் அளித்ததையடுத்து, 20 எம்எல்ஏக்களை தில்லி சட்டப்பேரவையில் இருந்து தகுதி நீக்கம் செய்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 8 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் ஏற்கெனவே தில்லி உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், தகுதி நீக்கம் செய்ய பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கைக்கு தடை விதிக்க மறுத்த தில்லி உயர் நீதிமன்றம், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, ஆம் ஆத்மி எம்எல்ஏக்களின் மனுக்கள் விசாரணைக்கு உகந்ததல்ல என்று தேர்தல் ஆணையம் தில்லி உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம் இந்த வழக்கு தினந்தோறும் விசாரிக்கப்படும் என்று தெரிவித்தது.
ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பார்லிமென்ட்டரி செயலர்களாக நியமனம் செய்ததற்கு துணைநிலை ஆளுநரிடம் ஒப்புதல் பெறவில்லை என்பதால், தில்லி அரசின் உத்தரவு செல்லாது என்று தில்லி உயர் நீதிமன்றம் கடந்த 2016, செப்டம்பர் 8-ம் தேதி அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பார்லிமென்ட்டரி செயலர் பதவிகளை ராஜிநாமா செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி, 20 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய குடியரசுத் தலைவருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது.