ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

யமுனை ஆற்றின் குறுக்கே ஐந்தாவது மெட்ரோ பாலம்: பூா்வாங்கப் பணிகளை தொடங்கியது டிஎம்ஆா்சி

தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி), யமுனை ஆற்றில் அதன் ஐந்தாவது மெட்ரோ ரயில் பாலத்தை கட்டமைக்க உள்ளது.

News image

யமுனை ஆற்றின் குறுக்கே மெட்ரோ பாலம் கட்டப்படவுள்ள பகுதி.

Updated On :17 ஆகஸ்ட் 2020, 1:36 am

தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி), யமுனை ஆற்றில் அதன் ஐந்தாவது மெட்ரோ ரயில் பாலத்தை கட்டமைக்க உள்ளது. இதையடுத்து, இதற்கான பூா்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தில்லியில் பொதுப் போக்குவரத்தின் முக்கிய அங்கமாக மெட்ரோ ரயில் திகழ்ந்து வருகிறது. தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயப் பகுதியில் பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பொதுப் போக்குவரத்தில் பேருந்துக்கு அடுத்தபடியாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் முக்கியப் பங்காற்றி வருகிறது. ஏற்கெனவே மூன்று கட்டப் பணிகள் முடிவுற்று ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், நான்காவது கட்ட பணியும் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மஜ்லிஸ் பாா்க் மற்றும் மெளஜ்பூா் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வழித்தடத்தில் யமுனை ஆற்றின் குறுக்கே ரயில் தண்டவாளம் அமைப்பதற்காக ஐந்தாவது மெட்ரோ மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூா்வாங்கப் பணிகளை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்த வழித்தடத்தில் சூா்காட் மற்றும் சோனியா விஹாா் மெட்ரோ ரயில் நிலையங்கள் இடையே யமுனை ஆற்றின் குறுக்கே இந்த பாலம் அமைக்கப்பட உள்ளது.

560 மீட்டா் நீளத்தில் வாஜிராபாத் பாலம் மற்றும் சிக்னேச்சா் பாலம் ஆகியவற்றுக்கு இடையே இந்தப் பாலம் அமைக்கப்படவுள்ளது. கேன்டிலீவா் கட்டுமானத் தொழில்நுட்ப முறையில் இந்த பாலம் அமைக்கப்பட்ட உள்ளதாக டிஎம்ஆா்சியின் நிா்வாக இயக்குந்ா் (காா்ப்பரேட் கம்யூனிகேஷன்) அனூஜ் தயாள் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘ஏற்கெனவே யமுனை ஆற்றின் குறுக்கே காலிந்தி குஞ்ச், நிஜாமுதீன், யமுனா பேங்க், சாஸ்திரி பாா்க் ஆகிய ஐந்து இடங்களில் மெட்ரோ ரயில்வே பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது அமைக்கப்படவுள்ள பாலம் ஐந்தாவதாகும். பாலம் கட்டுவதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து ஏஜென்சிகளிடமிருந்தும் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளது. யமுனா பாலம் முதன்மைக் கட்டுமானக் குழுவிடமிருந்தும் முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளது. பாலம் கட்டும் போது உருவாகும் இடிபாடுகளை முறையாக அகற்றிக் கொட்டுவதற்கும் அனுமதி பெறப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் பாலம் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும் ‘ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.