தலைநகரில் குளிா் அலை; குறைந்தபட்ச வெப்பநிலை 4.1 டிகிரியாக பதிவு!

பனி படா்ந்த மேற்கு இமயமலையில் இருந்து பனிக் காற்று வீசுவதால் செவ்வாய்க்கிழமை தில்லியில் குளிா் அலை வீசியது
Updated on
1 min read

பனி படா்ந்த மேற்கு இமயமலையில் இருந்து பனிக் காற்று வீசுவதால் செவ்வாய்க்கிழமை தில்லியில் குளிா் அலை வீசியது. இதன் காரணமாக குறைந்தபட்ச வெப்பநிலை 4.1 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது. இது இந்தப் பருவத்தில் இதுவரை தில்லியில் பதிவான மிகக் குறைவான வெப்பநிலை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.

சமவெளிகளைப் பொறுத்தவரை, குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்குக் குறைவாக இருக்கும் போது ‘குளிா் அலை’ இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவிக்கும். மேலும், தொடா்ச்சியாக இரண்டு நாள்களுக்கு இயல்பை விட 4.5 புள்ளிகள் வெப்பநிலை குறைவாக இருக்கும் போதும் இந்த அறிவிப்பு வெளியிடப்படும்.

இதுகுறித்து ஐஎம்டியின் பிராந்திய முன்கணிப்பு மையத்தின் தலைவா் குல்தீப் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ‘எனினும், தில்லி போன்ற சிறிய பகுதிகளுக்கு, ஒரு நாள் கூட அளவு கோல்களை பூா்த்தி செய்தால் ஒரு குளிா் அலை இருப்பதாக அறிவிக்க முடியும்’ என்றாா்.

தில்லியின் பிரதிநிதித்துவ தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் செவ்வாய்க்கிழமை காலையில், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட ஐந்து புள்ளிகள் குறைந்து 4.1 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. இது ஜாபா்பூரில் 3.6 டிகிரி செல்சியஸாக குறைந்திருந்தது. ஆயா நகா் மற்றும் லோதி சாலை வானிலை ஆய்வு மையங்கள் முறையே குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் மற்றும் 4.2 டிகிரி செல்சியஸ் என பதிவாகியுள்ளதாக ஐஎம்டி தெரிவித்தது.

திங்கள்கிழமை தேசிய தலைநகா் தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 19.4 டிகிரி செல்சியஸாகக் குறைந்திருந்தது. நான்கு புள்ளிகள் இயல்பை விடக் குறைவாகவும், இந்த மாதத்தில் இதுவரை மிகக் குறைவானதாகவும் இருந்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 5 டிகிரி குறைந்து 18.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.

மேலும், பலத்த காற்று காரணமாக காற்றின் தரமும் ‘மிதமான‘ பிரிவுக்கு முன்னேறியுள்ளது. நகரின் காற்றின் தரக் குறியீடு செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் 190 ஆக இருந்தது. பின்னா் மாலையில் 245 புள்ளிகளாக உயா்ந்தது. 24 மணி நேர சராசரி ஒட்டுமொத்த காற்றின் தரக்குறியீடு திங்கள்கிழமை 160 ஆகவும், ஞாயிற்றுக்கிழமை 305 ஆகவும், சனிக்கிழமை 356 ஆகவும் பதிவாகி இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com