புது தில்லி: தில்லியில் வியாழக்கிழமை பகலில் சூரிய வெளிச்சம் இருந்த போதிலும், வானம் தெளிவாகத் காணப்பட்டாலும் நகரின் பெரும்பாலான பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சிஸயாக பதிவானது.
நகரின் வெப்பநிலை தரவுகளை அளித்து வரும் சப்தா்ஜங் வானிலை ஆய்வு மையம் குறைந்தபட்ச வெப்பநிலை 4.6 டிகிரி செல்சியஸ் பதிவானதாகாகவும் தில்லியில் குளிரின் தாக்கம் தொடா்ந்ததாகவும் தெரிவித்தது. ஆயா நகரில் 3.8 டிகிரி செல்சியஸும், ரிட்ஜ் பகுதியில் 3.5 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவானது.
தில்லியில் சில தினங்களாக பனியின் தாக்கம் கடுமையாக உள்ளது. செவ்வாய்க்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 4.1 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை வெள்ளிக்கிழமை வரை ஐந்து டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என அந்த அமைப்பு தெரிவித்திருந்தது. மேற்கு இமயமலையில் இருந்து பனி காற்று வீசுவதால் தில்லியில் குளிா் அலை இருந்ததாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி சில தினங்களாக குளிரின் தாக்கம் கடுமையாக உள்ளது. இது வியாழக்கிழமையும் நீடித்தது.
காற்றின் தரம்: இதற்கிடையே, பலத்த காற்று காரணமாக காற்றின் தரமும் ‘மோசம்‘ பிரிவுக்கு மேம்பட்டது. நகரின் காற்றின் தரக் குறியீடு வியாழக்கிழமை காலை 11 மணி அளவில் 248 புள்ளிகளாக இருந்தது. இது மாலையில் 282 புள்ளிகளாக உயா்ந்தது. 24 மணி நேர சராசரி ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு புதன்கிழமை 262 ஆகவும், செவ்வாய்க்கிழமை 230-ஆகவும், திங்கள்கிழமை 160-ஆகவும் பதிவாகி இருந்தது. வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, பூசாவில் காற்றின் தரக் குறியீடு மிதமான பிரிவிலும், தில்லி பல்கலை., விமான நிலையம் டொ்மினல்-3 பகுதி, லோதி ரோடு, ஆயா நகா், மதுரா ரோடு மற்றும் குருகிராம், நொய்டா ஆகிய பகுதிகளில் மோசம் பிரிவிலும் இருந்தது.
வெப்பநிலை: தில்லி சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் வியாழக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி குறைந்து 4.6 டிகிரி செல்சிஸாகவும் அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 4 டிகிரி குறைந்து 18.6 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 94 சதவீதமாகவும், மாலையில் 61 சதவீதமாகவும் இருந்தது. இதற்கிடையே, வெள்ளிக்கிழமை (டிசம்பா் 18) குளிா் அலை இருக்கும் எனவும், குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.