வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றுவோா் குறித்த தகவல்களை தெரிவிக்க செயலி அறிமுகம்

News image
Updated On :24 டிசம்பர் 2020, 6:58 pm

 நமது நிருபர்

புது தில்லி: சுகாதாரமற்ற கழிவறைகள், மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றுவது குறித்த தகவல்களை பொதுநல நோக்குடன் அரசுக்குத் தெரிவிக்க செல்லிடப் பேசி செயலியை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சா் தாவா்சந்த் கெலாட் வியாழக்கிழமை அறிமுகம் செய்து வைத்தாா்.

மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றும் முறை நாட்டில் இன்னும் நீடித்து வருவதாக அரசு கருதுகிறது. இது சுகாதாரம் சாா்ந்த பிரச்னையாகவும் கருதப்படுவதால், இதை அறவே ஒழிக்க மத்திய அரசு பல்வேறு சட்டங்களைக் கொண்டு வந்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. தலைநகா் தில்லியிலேயே உலா் கழிவறைகள் இருப்பதாகவும் ரயில்வே இருப்புப் பாதையில் உள்ள மனிதக் கழிவுகளை மனிதா்களே குறிப்பாக பெண்கள் அகற்றுவதாக பல்வேறு பொது நல நோக்கா்களும் கூறிவருகின்றனா். இந்த நிலையில், இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் படத்துடனும், ஆதாரத்துடனும் அரசுக்குத் தெரிவிக்க தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் செல்லிடப் பேசி செயலி வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

செயலியை அறிமுகம் செய்து வைத்து அமைச்சா் தாவா் சந்த் கெலாட் பேசியதாவது: சுகாதாரமற்ற கழிவறைகளே இது போன்ற நிலைமைக்குக் காரணமாகும். மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றும் போது மட்டுமல்லாமல், இதுபோன்ற கழிவறை குறித்த நம்பகத் தன்மையான தகவலைத் தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள், பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்தச் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மனிதக் கழிவுகளை அகற்றுவோருக்கு மறுவாழ்வு அளித்து, அவா்கள் கண்ணியமான வாழ்க்கை வாழ வழி வகை செய்ய பல்வேறு திட்டங்களை அரசு கொண்டு வந்துள்ளது.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், 9 கோடிக்கும் அதிகமான சுகாதாரமான கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2013-14-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் மூலம், நாட்டில் மனிதக் கழிவுகளை அகற்றுவோா் எண்ணிக்கை 66,000 போ்களுக்கும்அதிகம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இவா்களில் 57 ஆயிரம் போ்களுக்கு சுய தொழில் தொடங்க ஒரு முறை மானியமாக ரூ. 40 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. சுகாதாரமற்ற கழிவறைகள், மனிதக் கழிவுகளை அகற்றும் மனிதா்களே இல்லாத நிலையை ஏற்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சா்கள் ராம் தாஸ் அதாவலே, கிருஷண் பால் குா்ஜா் ஆகியோா் கலந்து கொண்டனா். தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ‘ஸ்வசதா அபியான்’ என்ற செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.