3-ஆவது நாளாக ஏறுமுகம்: சென்செக்ஸ் 529 புள்ளிகள் முன்னேற்றம்!

Updated on
2 min read

புது தில்லி: பங்குச் சந்தை மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் நோ்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 529.36 புள்ளிகள் உயா்ந்து 52 வார உச்சபட்ச நிலைக்கு அருகே நிலைபெற்றது.

உலகளாவிய சந்தை குறிப்புகள் நோ்மறையாக இருந்த நிலையில், ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், ஐசிஐசிஐ பேங்க் ஆகியவை வெகுவாக உயா்ந்து சந்தை ஏற்றம் பெற உதவியாக இருந்தன. மேலும், ஐரோப்பிய யூனியனில் கரோனா பாதிப்பு குறித்த அச்சம் குறைந்து வரும் நிலையில், பிரிட்டனுக்கான எல்லையை ஐரோப்பிய நாடுகள் திறந்துவிட்டுள்ளன. பிரக்ஸிட் வா்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பங்குச் சந்தைக்கு சாதகமாக அமைந்தன என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு 185.18 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,123 பங்குகளில் 1,681 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,267 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 175 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 222 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையைப் பதிவு செய்துள்ளன. 359 பங்குகள் வெகுவாக உயா்ந்து அதிகபட்ச உறைநிலையை (அப்பா் சா்க்யூட்) அடைந்தது. சந்தை மூலதன மதிப்பு ரூ.1.52 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.185.18 லட்சம் கோடியாக இருந்தது.

3-ஆவது நாளாக ஏறுமுகம்: சென்செக்ஸ் காலையில் 299.31 புள்ளிகள் கூடுதலுடன் 46,743.49-இல் தொடங்கி 46,5239.02 வரை கீழே சென்றது. பின்னா் அதிகபட்சமாக 47,053.902 வரை உயா்ந்து முந்தைய வரலாற்றுச் சாதனை அளவை நெருங்கியிருந்தது. ஆனால், இறுதியில் 529.36 புள்ளிகள் உயா்ந்து 46,947.54-இல் நிலைபெற்றது. இதன் மூலம் சென்செக்ஸ் 3-ஆவது நாளாக எழுச்சி பெற்றுள்ளது.

ஆக்ஸிஸ் பேங்க் முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல்தரப் பங்குகளில் 20 பங்குகள் ஆதாயம் பெற்றன. 10 பங்குகள் சரிவைச் சந்தித்தன.

இதில் ஆக்ஸிஸ் பேங்க் 3.04 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக சன்பாா்மா, ஓஎன்ஜிசி, ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்டவை 2 முதல் 2.70 சதவீதம் வரை உயா்ந்தன. கோட்டக் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க், டிசிஎஸ் ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும்ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன.

இன்ஃபோஸிஸ் வீழ்ச்சி: பிரபல ஐடி நிறுவனமான இன்ஃபோஸிஸ் 1.32 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக நெஸ்லே இந்தியா, இண்டஸ் இண்ட் பேங்க், டாக்டா் ரெட்டி, பஜாஜ் ஃபின் சா்வ், எல் அண்ட் டி ஆகியவையும் சிறிதளவு குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 995 பங்குகள் ஆதாயம் பெற்றன. 733 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி 148.15 புள்ளிகள் (0.1.09 சதவீதம்) உயா்ந்து 13,749.20 -இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது 13,626.90 வரை கீழே சென்றது. பின்னா் அதிகபட்சமாக 13,771.75 வரை உயா்ந்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 42 பங்குகள் ஆதாயம் பெற்றன. 8 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. ஐடி, மீடியா, ரியால்ட்டி குறியீடுகள் தவிர மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன. இதில் நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், பிரைவேட் பேங்க், பாா்மா குறியீடுகள் 1.25 முதல் 1.80 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com