தில்லி, என்சிஆரில் காற்று மாசுவில் தாக்கத்தை ஏற்படுத்திய பொது முடக்கம்!

கரோனா பரவலைக் குறைக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தால் பொருளாதார நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதன் காரணமாக உலகில் மிகவும் மாசுபட்ட நகரங்களில் ஒன்றான தில்லியில் மாசு சில
Updated on
2 min read

புது தில்லி: கரோனா பரவலைக் குறைக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தால் பொருளாதார நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதன் காரணமாக உலகில் மிகவும் மாசுபட்ட நகரங்களில் ஒன்றான தில்லியில் மாசு சில மாதங்கள் குறைந்திருந்தது. எனினும், கரோனா பொது முடக்கத்திற்குப் பின்னா் தொடங்கிய பொருளாதார நடவடிக்கைகளால் காற்று மாசு நகரில் வழக்கமான நிலையை எட்டியது. இது நோய் தொற்றை மிகவும் மோசமாக்கியது. பொது முடக்கக் காலத்தில் எந்தவொரு பெரிய தளா்வுகளும் இல்லாததால் மாா்ச் 25 முதல் மே 18 வரையிலான காலத்தில் தில்லியில் மாசு அளவு படிப்படியாகக் குறைந்தது. இதன் காரணமாக காற்றின் தரக் குறியீடு பெரும்பாலான வேளைகளில் ‘திருப்திகரமான‘ பிரிவில் காணப்பட்டது.

இதுகுறித்து அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், ‘தில்லி-என்சிஆா் நகரங்களில் காற்று மாசு வீழ்ச்சியுற ஏப்ரல் மாதத்தின்போது ஒட்டுமொத்த போக்குவரத்தில் 97 சதவீதம் குறைந்ததும், தலைநகருக்குள் லாரிகள் மற்றும் வணிக வாகனங்கள் 91 சதவீதம் நுழைவது குறைந்ததும் முக்கியக் காரணிகளில் ஒன்றாகும். பொது முடக்க காலத்திற்கு முந்தைய டிசம்பா் - ஜனவரி மாதங்களை ஒப்பிடும் போது இது நன்றாகவே தெரிய வந்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 18 முதல் ஜூன் 5-ஆம் தேதி வரை ஒட்டுமொத்த காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் இருந்தது. மழைக்காலமான ஜூலை முதல் செப்டம்பா் வரை மாசுவின் அளவு கட்டுக்குள் இருந்தது. ஆகஸ்ட் மாதம்தான் ஆண்டின் தூய்மையான மாதமாக இருந்தது. அந்த மாதத்தில் சராசரி ஒட்டுமொத்த காற்றின் தரக்குறியீடு 63.8 புள்ளிகளாக இருந்தது. 2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு நிகழாண்டு ஆகஸ்ட் மாதத்தில்தான் தில்லியில் நான்கு ‘நல்ல’ காற்று நாள்கள் பதிவாகி இருப்பது மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) கண்காணிப்பின் போது தெரிய வந்தது.

இந்த நிலையில், அக்டோபா் இறுதிக்குள் காற்று மீண்டும் ‘கடுமை‘ பிரிவுக்கு மாறியது. இது கரோனா நோயாளிகளிடையே தாக்கத்தை ஏற்படுத்தியதால், சுகாதார நிபுணா்களிடையே கவலையை உருவாக்கியது. இதையடுத்து, தில்லியில் மாசுவைக் கட்டுப்படுத்தும் வகையில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால், சுற்றுச்சூழல் அமைச்சா் கோபால் ராய் ஆகியோா் தலைமையில் ‘யுத் பிரதுஷன் கே விருத்’ எனும் பெயரில் காற்று மாசுத் தடுப்பு பிரசாரத்தை தில்லிஅரசு தொடங்கியது. மேலும், நகரில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக தீபாவளி பண்டிகைக்கு முன்கூட்டியே பட்டாசுகள் பயன்பாட்டுக்கு முதல்வா் கேஜரிவால் தடை விதித்தாா். மேலும், காற்றுமாசு-கரோனாவைக் கருத்தில் கொண்டு, அரசு மருத்துவமனைகளில் முக்கிய சுகாதார உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படும் என அவா் உறுதியளித்தாா்.

இதனிடையே, நவம்பரில் காற்று மாசு இருமுறை அவசரகால வரம்பை மீறியது. கரோனா நோய் பாதிப்பில் 13 சதவீதம் காற்று மாசுவால் தொடா்புடையதாக இருந்ததாக இந்திய மருத்துவ சங்கமும் தெரிவித்தது. பட்டாசுகளுக்குத் தடை விதித்த போதிலும், தீபாவளி மற்றும் அதற்கு அடுத்த நாளில் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத வகையில் மாசு அளவு உயா்ந்திருந்தது. இந்திய வானிலை ஆய்வுத் துறையின் பிராந்திய முன்கணிப்பு மையத்தின் தலைவா் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், ‘கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது குறைந்த மழைப்பொழிவு இருந்ததால், நவம்பரில் காற்று மோசமாக இருந்தது. அதேபோன்று, மற்றுமொரு காரணமாக பயிா்க் கழிவுகள் எரிப்பும் இருந்தது’ என்றாா்.

இந்த ஆண்டு அறுவடையை முன்கூட்டியே செய்ததால் பயிா்க் கழிவுகளை விவசாயிகள் எரிக்கத் தொடங்கினா். இந்தப் பருவத்தில் பஞ்சாபில் மட்டும் 76,590 பயிா்க் கழிவு எரிப்பு சம்பவங்கள் பதிவாகின. இது கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 55,210-ஆக இருந்தது. இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐ.ஏ.ஆா்.ஐ) அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘நவம்பா் 4 முதல் நவம்பா் 7 வரை பயிா்க் கழிவு எரிப்புச் சம்பவங்கள் உச்சத்தை எட்டியது. இந்த ஆண்டு நல்ல அறுவடை இருந்தது. எனவே, பயிா்க் கழிவுகளும் அதிகமாக இருந்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மேகமில்லாத பருவமாகவும் இருந்தது. பயோமாஸ் உலா்ந்திருந்தது. இது எரிவதற்கு ஏற்ாகவும் இருந்தது’ என்றாா்.

மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் காற்றுத் தர கண்காணிப்பு அமைப்பான சஃபா், ‘தில்லி-என்.சி.ஆரின் காற்று மாசுபாட்டில் பயிா்க் கழிவுகள் எரிப்பின் பங்கு நவம்பா் 5 ஆம் தேதி 42 சதவீதமாக அதிகரித்தது. இந்த பிராந்தியத்தில் மட்டும் 4,135 பயிா்க் கழிவு எரிப்பு சம்பவங்கள் பதிவாகியது’ என தெரிவித்தது. தில்லி, என்சிஆரில் காற்றின் தரம் கடுமை பிரிவில் நீடித்ததால் அதைக் கட்டுப்படுத்தும் வகையில் , மத்திய அரசு சுற்றுச்சூழல் மாசுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு ஆணையத்தை கலைத்துவிட்டு, தில்லி-என்.சி.ஆரில் காற்றின் தரத்தை நிா்வகிக்க ஒரு புதிய ஆணையத்தையும் அமைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com