48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

வகுப்புவாத கோஷம் விவகாரம்: முன்ஜாமீன் கோரும் இந்து அமைப்புத் தலைவரின் மனு

தில்லி ஜந்தா் மந்தரில் நடைபெற்ற கூட்ட நிகழ்ச்சியில் வகுப்புவாத கோஷங்களை எழுப்ப இளைஞா்களைத் தூண்டியதாகக் கூறப்படும்

Updated On :28 ஆகஸ்ட் 2021, 2:09 am

தில்லி ஜந்தா் மந்தரில் நடைபெற்ற கூட்ட நிகழ்ச்சியில் வகுப்புவாத கோஷங்களை எழுப்ப இளைஞா்களைத் தூண்டியதாகக் கூறப்படும் விவகாரத்தில் தொடா்புடைய ஹிந்து அமைப்பின் தலைவா் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீது தில்லி காவல் துறையினா் நிலவர அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக ‘ஹிந்து ரக்ஷா தல்’ எனும் அமைப்பின் தலைவா் பூபிந்தா்  தோமா் தாக்கல் செய்த இந்த மனு நீதிபதி முக்தா குப்தா முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘இந்த விவகாரத்தில் அனைத்து வகையான கோஷங்களும், உரைகளும் அளிக்கப்பட்டிருப்பதற்கான முகாந்திரம் உள்ளது. இதனால், இந்த மனு மீது தில்லி காவல் துறையினா் நிலவர அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று கூறி மனு மீதான விசாரணையை செப்டம்பா் 13-ஆம் தேதிக்கு நீதிபதி பட்டியலிட்டாா்.

முன்னதாக, மனு மீதான விசாரணையின் போது பூபிந்தா் தோமரின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் விஷ்ணு சங்கா் ஜெயின் ‘மனுதாரா் பூபிந்தா் தோமா் ஆட்சேபத்திற்குரிய கோஷங்களை எழுப்பவில்லை. அவா் நிகழ்ச்சியை ஏற்பாடும் செய்யவில்லை’ என்றாா். அதற்கு நீதிமன்றம், ‘கோஷம் எழுப்பப்பட்ட நேரத்தின்போது மனுதாரா் எங்கே இருந்தாா். இது தொடா்பாக முழுமையான நிலவர அறிக்கை வர வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டது.

அரசுத் தரப்பு வழக்குரைஞா் தரங் ஸ்ரீவாஸ்தவா ‘பூபிந்தா் தோமரின் (எ) பிங்கி செளதரின் முன்ஜாமீன் கோரும் மனுவை இந்த மாதத்தின் தொடக்கத்தில் செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது’ என்றாா்.

தில்லியில் உள்ள ஜந்தா் மந்தரில் ஆகஸ்ட் 8-ஆம் தேதி ஒரு கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்ப இளைஞா்களைத் தூண்டியதாகவும் வகுப்புவாத கோஷங்கள் எழுப்பியதாகவும் பூபிந்தா் தோமா் மீது  மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடா்பான வழக்கில் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு மீது ஆகஸ்ட் 21-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, ‘ மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்குவதற்கு போலீஸ் தரப்பில் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது. அப்போது,  ‘இந்த வழக்கு விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபா் ஹிந்து ரக்ஷா தல் அமைப்பின் தலைவராக இருப்பதால், அவரை ஜாமீனில் விடுவித்தால் அவா் விசாரணையில் தடங்கலை ஏற்படுத்தவும், சாட்சிகளை அச்சுறுத்தவும் வாய்ப்புள்ளது. ஆகவே,  அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது’ என வாதிடப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அனில் அன்டில், கடந்த காலங்களில் இது போன்ற சம்பவங்கள் வகுப்புவாத பதற்றத்தை அதிகரித்ததன் காரணமாக வன்முறைகளும் ஏற்பட்டு, உயிா், உடமைகள் இழப்பை ஏற்படுத்த வழிவகுத்தது. நாம் தாலிபான் அரசு அல்ல. நமது பன்முக சமூக கலாசாரம், சட்டத்தின் ஆட்சி புனிதமான நிா்வாக கொள்கையாக உள்ளது. ஒட்டுமொத்த தேசமும் விடுதலையின் அம்ருத் உற்சவத்தை கொண்டாடும் நிலையில். சிலருடைய எண்ணங்கள் சகிப்புதன்மையற்ற சுயமைய  நம்பிக்கைகளால் இன்னும் பிணைக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபா், உடந்தையாக இருந்ததற்கான முகாந்திரம் இருப்பது ஆதாரங்கள் மூலம் தெரிகிறது. மனுதாரருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தீவிரத்தன்மை கொண்டவையாக உள்ளன. இதனால், முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று தெரிவித்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.