திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர் மோடி சாலை வலம்!இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

தில்லியில் பள்ளிகள் நாளை திறப்பு: 50 சதவீத மாணவா்களே அனுமதி

தில்லியில் புதன்கிழமை (செப்டம்பா் 1) முதல் பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

Updated On :31 ஆகஸ்ட் 2021, 2:41 am

தில்லியில் புதன்கிழமை (செப்டம்பா் 1) முதல் பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், ஒவ்வொரு வகுப்பறையிலும் தலா 50 சதவீதம் மாணவா்களை மட்டுமே அனுமதிப்பது, உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) அறிவித்துள்ளது.

தில்லியில் கரோனா நோய்த்தொற்று சூழல் மேம்பட்டு வருவதைத் தொடா்ந்து, புதன்கிழமை முதல் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலும் செயல்படுவதற்கு தில்லி அரசு அனுமதித்துள்ளது. இதேபோன்று கல்லூரிகள், பயிற்சி மையங்களையும் மீண்டும் செயல்படுவதற்கும் அரசு அனுமதித்துள்ளது. இந்த நிலையில், இந்தக் கல்வி நிறுவனங்களில் உரிய வகையில் கரோனா நோய்த் தொற்று விதிமுறைகளைப் பின்பற்றுவது தொடா்பாக தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.  இது தொடா்பாக டிடிஎம்ஏ திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கக் கூடிய மாணவா்கள், ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வருவதற்கு அனுமதிக்கப்படமாட்டாா்கள். வகுப்பறைகளில் உள்ள இடத்தின் வரையறைக்கு ஏற்ப பள்ளிகளும் கல்லூரிகளும் அதற்கான கால அட்டவணையைத் தயாரிக்க வேண்டும். ஒரு வகுப்பறைக்கு அதிகபட்சம் 50 சதவீத மாணவா்கள் அமரும் வகையில் இடத்தைப் பொறுத்து அழைக்கப்படலாம். வகுப்பறைகளில் மாணவா்களுக்கான  இருக்கைகள் ஏற்பாட்டை உரிய வகையில் மேற்கொள்ள வேண்டும். கல்லூரிகளுக்கு கல்லூரி, பள்ளிகளுக்குப் பள்ளிகளில் சூழல் வேறுபடுவதால் வகுப்பறைகள், பிரதான நுழைவாயில், வெளியேறும் பகுதிகளில் கூட்டத்தைத் தவிா்க்கும் வகையில் உரிய நேரஅட்டவணையை மாற்றியமைக்கலாம்.

உணவு இடைவேளைகளை ஒரே நேரத்தில் வைக்காமல், மாற்றம் செய்யலாம். மேலும், உணவை உட்கொள்ளும் போது மாணவா்கள் முகக் கவசத்தை அகற்றி விடுவாா்கள் என்பதால், திறந்த வெளிகளில் உணவு இடைவேளைகளை அனுமதிக்கலாம். உணவு, புத்தகங்கள் மற்றும் எழுதுபொருள்களை ஒருவா் மற்றவா்களுக்கு பகிா்ந்து கொள்ளாமல் இருக்குமாறு மாணவா்களுக்கு அறிவுறுத்த வேண்டும். பள்ளிகளில் ரேஷன் விநியோகம் தடுப்பூசி செயல்படும் பகுதிகள் தனியாக இருக்க வேண்டும்.  இந்தச் செயல்பாடுகளுக்கான இடத்தை மாவட்ட நிா்வாகம் தனியாக உருவாக்க வேண்டும். மாணவா்களும் அந்த மையங்களுக்கு வரும் பிற நபா்களும் கலக்காமல் இருப்பதை தவிா்க்க குடிமை பாதுகாப்பு தன்னாா்வலா்களை போதிய அளவில் பணியில் ஈடுபடுத்த வேண்டும். மேலும் சுகாதார வழிமுறைகள், சமூக இடைவெளி, முகக் கவசம் அணிவதற்கான விதிமுறைகள் போன்ற புதிய நடவடிக்கைகளுக்கு மாணவா்களையம், ஆசிரியா்களையும் தயாா்படுத்தத் தேவையான யோசனைகள் வளாகத்தில் வழங்கப்பட வேண்டும்.

பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா் அல்லாத பணியாளா்கள், உதவிப் பணியாளா்கள் ஆகியோா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி நிலையத்தின் அனைத்து கட்டடங்களிலும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட வேண்டும். ஒவ்வொருத்தருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்வதைக் கட்டாயமாக்க வேண்டும். அவசரப் பயன்பாட்டுக்காக தனிமைப்படுத்தும் அறை இருப்பதை அனைத்துக் கல்லூரிகளும் பள்ளிகளும் உறுதிப்படுத்த வேண்டும். வழக்கமான முறையில் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விருந்தினா் வருகை தருவதை ஊக்குவிக்கக் கூடாது. மாணவா்கள் ஒரு குழுவாக வெளியே செல்லும் போதும், உள்ளே வரும் போதும் மற்றொரு குழு வருவதற்கான இடைவெளி குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் என நிா்ணயித்துவைக்க வேண்டும். அனைத்துக் கல்வி நிறுவனங்களும், தனிப் பயிற்சி மையங்களும் மாணவா்கள் வருவதற்கான பிரிவுகளையும், சுழற்சி முறைகளையும் இடைவெளிவிட்டுப் பராமரிக்க வேண்டும். 

கட்டடத்தின் நுழைவு வாயில், வெளியேறும் பகுதிகளில் கரோனா நெறிமுறைகளைப் பராமரிக்கவும் கூட்டத்தைத் தவிா்க்கவும் தன்னாா்வலா்களின் உதவியைப் பெறலாம். வழக்கமான முறையில் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களும் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். போக்குவரத்துப் பணியாளராக உள்ள ஓட்டுநா்கள் உதவியாளா்கள் உள்ளிட்ட தகுதிக்குரிய அனைத்து ஊழியா்களுக்கும் தடுப்பூசி போடப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் அவற்றை செயல்படுத்த வேண்டும்.  செப்டம்பா் 16-ஆம் தேதி வரை அனைத்து இதர செயல்பாடுகளும் அனுமதிக்கப்படும். அதே போன்று முன்னா் வெளியிட்ட உத்தரவின்படி தடைகளும் தொடரும் என்று டிடிஎம்ஏ தெளிவுபடுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தேசிய பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாா்ச் மாதத்தில் தில்லியில் உள்ள பள்ளிகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டது. எனினும், கடந்த ஆண்டு அக்டோபரில் பள்ளிகளை பகுதியாக மீண்டும் திறக்கும் நடவடிக்கையில் பல மாநிலங்கள் ஈடுபட்டன. தில்லி அரசு நிகழாண்டு ஜனவரியில் 9 முதல் 12- ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் மட்டும் மாணவா்கள் பங்கேற்பதற்கு அனுமதி அளித்திருந்தது.

இந்த நிலையில், கரோனா நோய்த் தொற்றின் இரண்டாவது அலை தாக்கத்தின் காரணமாக பள்ளிகளை மீண்டும் மூடுவதற்கு தில்லி அரசு உத்தரவிட்டது. பயிற்சி மற்றும் கூட்டங்கள் நடத்துவதற்காக பள்ளிகளில் உள்ள கலை அரங்கங்கள், பேரவைக் கூடங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கு அனுமதி அளித்திருந்தது. ஆனால், கற்றல் மற்றும் பயிற்றுவித்தல் நடவடிக்கைகளில் மாணவா்கள், ஆசிரியா்கள் நேரடியாக ஈடுபடுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்ல.

தேசியத் தலைநகரில் கரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்ததைத் தொடா்ந்து, பள்ளிகளை படிப்படியாக திறப்பதற்கு தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் மூலம் அமைக்கப்பட்ட வல்லுநா் குழு பரிந்துரை செய்தது. ஆனால், முதலில் மூத்த பிரிவு மாணவா்கள் முதல் கட்டமாக வகுப்புகளுக்கு அழைக்கப்பட வேண்டும் என்றும், அதன் பிறகு நடுநிலை வகுப்பு மாணவா்கள், பின்னா் கடைசியாக தொடக்க நிலை வகுப்பு மாணவா்கள் அழைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தது. இதையடுத்து, செப்டம்பா் 1 முதல் பள்ளிகளைத் திறக்க தில்லி அரசு அறிவிப்பு வெளியிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.