கூடங்குளம் அணுஉலைக் கழிவுகள் ரஷியாவிற்கு திரும்ப அனுப்பாதது ஏன் ? மக்களவையில் இணையமைச்சா் விளக்கம்
தமிழகத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உருவாகும் அணுஉலை எரிபொருள்கழிவுப் பொருள்கள் மறுசுழற்சிப் பயன்பாட்டுக்கு


தமிழகத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உருவாகும் அணுஉலை எரிபொருள்கழிவுப் பொருள்கள் மறுசுழற்சிப் பயன்பாட்டுக்கு இசைவு தருவதால், ரஷியாவிடம் திருப்பித் தராமல் அந்தஅணுமின் நிலைய வளாகத்திலேயே பாதுகாப்புடன் வைத்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமா் அலுவலகம் மற்றும் அறிவியல் தொழில் நுட்பத் துறை மத்திய இணையமைச்சா் டாக்டா் ஜிதேந்திர சிங் மக்களவையில் தெரிவித்துள்ளாா்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உருவாகும் அணுஉலை எரிபொருள் கழிவுகள், இந்தியா-ரஷியா ஒப்பந்தத்தின்படி, ரஷியாவுக்கு திரும்ப அனுப்பாமல் கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்திலேயே வைத்துக் கொள்ளப்படுவது ஏன்? அதிலும் மனிதா்கள் வசிக்காத தொலைதூரப் பகுதியில் அணுக்கழிவுகளை ஆழ்நிலை கிடங்கில் வைக்கப்படாதது ஏன்? என அணுசக்தித் துறைக்கு பொறுப்பு வகிக்கும் பிரதமரிடம் மக்களவை திமுக உறுப்பினா் டி.ஆா்.பாலு எழுப்பி இருந்தாா்.
இதற்கு, மக்களவையில் பிரதமா் சாா்பில் பதில் அளித்த இணையமைச்சா் டாக்டா்.ஜிதேந்திர சிங் கூறியதாவது: ரஷிய நாட்டுடன் 2010-ஆம் ஆண்டில் இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது. இருப்பினும், அணுஉலை எரிபொருள் கழிவுகளை சேமித்து வைத்துக் கொள்ளவும் மறுசுழற்சிப் பயன்பாட்டுக்கும் இசைவு தருவதால், கூடங்குளம் வளாகத்திலேயே ‘முடிவுற்ற எரிபொருள் சுழற்சி’ கொள்கையின்படி வைத்துக் கொள்ளவும் இந்த ஒப்பந்தம் அனுமதியளிக்கிறது. இதன்படி மீள் பயன்பாட்டுக்கான ஆதாரப் பொருளாக அணுஉலைக் கழிவுகளைக் கருதி ரஷியாவிடம் திருப்பித் தராமல் கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்திலேயே வைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மீள் சூழற்சிக்கான தொழில்நுட்பங்கள் இந்தியாவில் உருவாக்கப்பட்டு வருகிறது. மீள் பயன்பாட்டுக்குப் பிறகு கிடைக்கும் இறுதிக் கழிவுகள் அளவில் மிகவும் சிறியதாக இருக்கும் என்பதால். இவற்றைச் சேகரிக்க ஆழ்நிலைக் கிடங்கு வசதியை உடனடியாக ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அணுமின் நிலையக் கழிவுகள் உற்பத்தி நிலையத்தின் வளாகப் பகுதிக்கு உள்ளேயும் தொலைவிலும் என இரு வகைகளில் கழிவுகள் சேமித்து வைக்கப்படுகின்றன. நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை இடா்பாடு காலத்திலும் பாதுகாப்புடன் இருக்கும் வகையில், இந்த சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ள தாராப்பூா், ராஜஸ்தானில் ராவத் பாத்தா ஆகிய அணுமின் நிலையங்களிலும் இது போன்ற அணுஉலைக் கழிவுகள் சேமிப்புக் கிடங்கு வசதிகள் உள்ளன என ஜிதேந்திரா சிங் தெரிவித்தாா்.
மற்றொரு கேள்விக்கு மாநிலங்களவையில் பதிலளித்த ஜிதேந்திர சிங், கடந்த பத்தாண்டுகளில் (2011-12 முதல் 2020-21 வரை), அணுசக்தி உற்பத்திக்கான வருடாந்திர இலக்கு 3,74,383 மில்லியன் யூனிட்டுகளாக இருந்தது. ஆனால் இந்த இலக்கையும் தாண்டி மொத்த உற்பத்தி 3,81,593 மில்லியன் யூனிட்கள் அணுசக்தி மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அணுமின் உற்பத்தியை அதிகரிக்க, 9,000 மெகாவாட் திறன் கொண்ட புதிய அணு மின் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துநிதி ஒதுக்கீடும் செய்துள்ளது. தற்போது கட்டுமானத்தின் கீழ் உள்ள திட்டங்கள் மற்றும் ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்கள் படிப்படியாக முடிக்கப்பட்டால், தற்போதுள்ள 6780 மெகாவாட் அணுசக்தி திறன் 2031 க்குள் 22,480 மெகாவாட்டாக அதிகரிக்கும் எனவும் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...